இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-25) காலை தொடங்கியது. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. .
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01-02-25) மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பேசிய அவர், “அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75,000 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். முதல் கட்டமாக அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் மேல்நிலைப்பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பிராட் பேண்ட் இணையதள வசதி செய்யப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம் அமைக்கப்படும். இல்லங்களுக்கு குடிநீர் ஜல்ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும். நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். நகரங்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மின்சார விநியோகத்தில் சீர்திருத்தங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அணுஉலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2047ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணு மின் உற்பத்தி செய்ய திட்டம் வழிவகுக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர அணு உலைகளை உருவாக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து 50 புதிய சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். மாநில அரசின் ஒத்துழைப்புடன் நாட்டில் உள்ள 22 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். 120 புதிய இடங்களுக்கு விமான சேவையை ஊக்குவிக்க புதுப்பிக்கப்பட்ட உடான் திட்டம் அறிமுகம் செய்யப்படும். புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். பொருள் விநியோக சேவையில் உள்ள டெலிவரி ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும். ஒப்பந்த ஊழியர்களை சமூக நலத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரங்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விண்வெளித் துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும்.
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். 63 ஆண்டுகால பழமையான வரி நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். காப்பீடு துறையில் அன்னிய முதலீட்டு வரம்பு 74%இல் இருந்து 100% ஆக அதிகரிக்கப்படும். நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் நிதி பற்றாக்குறை 4.8%ஆக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பற்றாக்குறையை 4.4% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படும்; 6 மருந்துகளுக்கு 5% சலுகை வரி விதிக்கப்படும். கோபால்ட் உள்ளிட்ட அரிய வகை தாதுக்களுக்குச் சலுகை வழங்கப்படும். கப்பல் கட்டுமானத்திற்கான சலுகைகள் மேலும் 10 வருடங்களுக்கு தொடரும். செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்தி வரி சலுகை வழங்கப்படும். லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்கவரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும். தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு சலுகை வழங்கப்படும். வருமான வரி சட்டம் எளிதாக்கப்படும்.
வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும். 2 சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகள் பெறலாம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி சலுகை நீட்டிப்பு செய்யப்படும். நடுத்தர வர்க்கத்தினருக்கான ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது” என்று அறிவித்து தனது உரையை நிறைவு செய்தார். 2023இல் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சமாக இருந்த நிலையில், உச்சவரம்பில் அதிரடி மாற்றங்களை செய்து தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம் மாதம் ஊதியம் ரூ.1 லட்சம் வரை பெறுபவர்கள் இனி வருமான வரி செலுத்த தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.