வழிப்பறி செய்துவிட்டு கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் மனலூர்பேட்டையில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மனலூர்பேட்டை பகுதியில் மனலூர்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர் ராஜசேகர், தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐந்து பேர் இரண்டு வாகனத்தில் வந்தனர். சந்தேகத்திற்கிடமாக வந்த 5 பேரை போலீஸார் மடங்கியுள்ளனர்.
வாகனத்தின் ஆவணங்களைக் காட்டுங்கள் என்று போலீஸார் கூறியபோது அவர்கள் திருதிருவென விழித்தனர். சந்தேகமடைந்த போலீஸார் சோதனை செய்தபோது அவர்களிடம் மூன்று அடி நீள கத்தி இரன்டு, பட்டா கத்தி ஒன்று, செல்போன் மற்றும் 1,12,900 ரூபாய் ரொக்கமும் இருந்துள்ளது. உடனடியாக அந்த ஐந்து நபர்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மிதுலன் (20), விருதுவிளங்கினானைச் சேர்ந்த அஜய்குமார் (19), முகமது பாசில் (24), பழனி (30) கள்ளகுறிச்சி மாவட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தை ஏசு (23) எனத் தெரியவந்தது.
மேலும் போலீஸாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் சேர்ந்து திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கத்தியைக்காட்டி மிரட்டி இரவில் தொடர் வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த ஐவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.