‘’ஏய்!’’என்று ஆவேசமாக கத்திய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியதை அடுத்து ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம்பட்டவர்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த், அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் யார் நீங்க? 100 நாள் வராமல் தற்போது ஏன் இங்கு வந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதன் பின்னர், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்தற்கு சமூக விரோதிகளே காரணம் என குற்றம்சாட்டினார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சென்னை திரும்பிய ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார் ரஜினிகாந்த். தொடர்ந்து அவரை நோக்கி இதே கேள்விகளை கேட்டதால் ஒரு கட்டத்தில் நிதானமிழந்த ரஜினிகாந்த், நிருபர்களை பார்த்து மிரட்டும் தொனியில், ‘’ ஏய்!’’ வேறு ஏதாவது கேள்விகள் இருக்கா என ஆவேசமாக கத்தினார் .
இதையடுத்து சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் தான் செய்தியாளர்கள் பணி. கேள்விகள் கேட்பதற்காக மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் அநாகரிக செயல். இதை அனுமதிக்க முடியாது. வரம்பு மீறி வார்த்தை விட்டதற்கு ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,
’’விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.’’
என்று தெரிவித்துள்ளார்.