பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையையும், நீதித்துறையையும் எச்.ராஜா தரக்குறைவாக பேசியதாக வீடியோ வெளியானது. இதையடுத்து எச்.ராஜாவை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கறிஞர்கள் பலர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு முன்பு சென்று, எச்.ராஜா மீது நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு தொடர வேண்டும் என்று புகார் கூறினர். அதற்கு நீதிபதிகள், ’’ எச்.ராஜா மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யாது. ஆகவே, எச்.ராஜா மீது புகார் தெரிவிக்கும் வழக்கறிஞர்கள் அதை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். அப்படி மனு தாக்கல் செய்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்’’என்று தெரிவித்தனர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.