உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தன்னுடைய முதல் சுற்றை முடித்துக் கொண்டு, 2ஆவது சுற்றை ஆரம்பித்துள்ள நிலையில், 'கை கால்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்', 'இருவருக்கு இடையில் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்', 'முகக் கவசம் அணியுங்கள்' என்று அரசு தொடா்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தாலும், மற்றொருபுறம் நல்ல மன நிலையோடு இருக்கக் கூடியவா்கள் பலர் அதைக் கடைப்பிடிப்பதில்லை.
ஆனால், இந்த கரோனா பாதிப்பு காலங்களில், பலர் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்குத் தாங்களே முன்வந்து, உணவு அளித்துத் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர் என்பது மனிதாபிமானம் நிறைந்த மனிதர்கள் கொஞ்சம் போ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற மனநிறைவைத் தருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், திருச்சி மாவட்டம், லால்குடி நன்னிமங்கலம் பகுதியில் சாலையோர ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூர்த்தி(40) என்பவரை லால்குடி மகளீா் காவல்துறையினா் மீட்டு, சுகாதார ஆய்வாளா் பால்ராஜ் ஆகியோர் இணைந்து லால்குடி அரசு மருத்துவமனையில், அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்து, மாற்றுத் திறனாளி நல அலுவலா் ரவிச்சந்திரன் மூலம், தீரன் நகா்ப் பகுதியில் உள்ள தனியார் கருணை இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.
இப்படிப்பட்ட மீட்புப் பணிகளை திருச்சியின் நகரப் பகுதிகளில் செய்தால், பலர் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். எனவே, அதிகாரிகள் திருச்சியின் நகரப் பகுதிகளில் பல இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிய வேண்டும் என்றும், இப்படி எந்தவிதச் சுகாதாரமும் இல்லாமல், அழுக்கான கிழிந்த ஆடைகளுடன் சுற்றித்திரியும் அவர்களை அரசு மீட்டு அவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து, இந்த மழைக் காலங்களில் அவர்களுக்குத் தேவையான எல்லாவிதப் பாதுகாப்பு உதவிகளையும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.