மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியைக் கடந்த 13 ஆம் தேதி (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி தொடங்கினர். அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காக துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தொடர்ந்து 3 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று (15.02.2024) மீண்டும் விவசாய அமைப்புகளுடன் சண்டிகரில் மத்திய அரசு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். இருப்பினும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சலோ என்ற பேரணி தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டம் 4 வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் காஜிப்பூரில் இருந்து டெல்லி செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான கார்கள், பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன.