Skip to main content

உலக முதலீட்டாளர்கள் மாநாடு; தமிழக முதல்வர் ஆலோசனை!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
World Investors Conference and Advice from Tamil Nadu Chief Minister

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, தொழில்துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது” என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகளை தற்போது தமிழக தொழில்துறை செய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04-01-24) ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்