Skip to main content

எந்நேரமும் கைதாகலாம்; மனைவியை முதல்வராக்கும் ஹேமந்த் சோரன்?

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
report that if Hemant Soren is arrested, his wife will take over as CM

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், முதல்வரின் இல்லத்தில் விசாரணை மேற்கொள்ளும்போது, பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் வலியுறுத்தி அமலாக்கத்துறை சார்பில், தலைமைச் செயலாளர், உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டின் முன்பும் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டனர். இதையடுத்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்றது. இந்நிலையில், விசாரணைக்கு பிறகு தனது இல்லத்தின் வெளியே கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “எனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால், சதிகாரர்களின் சவப்பெட்டியில் இறுதி ஆணி எங்களால் போடப்படும். நாங்கள் பயப்பட மாட்டோம். உங்கள் தலைவர் முதலில் தோட்டாக்களை எதிர்கொண்டு உங்கள் மன உறுதியை உயர்த்துவார். உங்களின் இடைவிடாத ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஹேமந்த் சோரன் ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் பின்னால் நிற்பார்” எனத் தெரிவித்தார். ஹேமந்த் சோரனின் இந்தப் பேச்சு பெரும் சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது. இருப்பினும், இதற்கு தக்க பதிலடி தரப்படும் என பாஜகவினர் சிலர் கருத்து தெருவித்து வந்தனர். 

இந்த நிலையில், ஜனவரி 27-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் ஏதேனும் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் கடிதம் அனுப்பியது. ஆனால், இந்தக் கடிதத்தையும் பொருட்படுத்தாத ஹேமந்த் சோரன், எந்தவித அதிகாரபூர்வ பதிலையும் அமலாக்கத்துறைக்கு அனுப்பவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி ஹேமந்த் சோரன் ராஞ்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாகவும், விரைவில் அவர் ராஞ்சி திரும்புவதாகவும் அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முக்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 29ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று, ஹேமந்த் சோரனை விசாரிக்க ஜார்கண்ட் பவன் மற்றும் மோதிலால் நேரு மார்க்கிலுள்ள அவரின் தந்தை இல்லத்துக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை எனச் சொல்லப்பட்டது.

இதையடுத்து, டெல்லியில் ஹேமந்த் சோரனின் முதல்வர் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் ஹேமந்த் சோரன் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெரிதும் ஏமாந்துபோன அமலாக்கத்துறை அதிகாரிகள்.. சோதனையின்போது அவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதற்குள் நிலைமை கைமீறிச் சென்றதாகவும் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல் பரவத் தொடங்கியது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயந்து ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளதாக' ஜார்க்கண்ட் பா.ஜ.க. தலைவர் பாபுலால் மராண்டி பேசியதும் அதற்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. மேலும், அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், காணாமல் போன ஜார்கண்ட் முதல்வரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.  யாரேனும் ஒருவர் இவரைப் பார்த்தால், கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உடனடியாகத் தெரிவிக்கவும்.  சரியான தகவல் கொடுப்பவருக்கு ரொக்கமாக ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் என கூறியிருந்தார். அமலாக்கத்துறை மீதான பயம் காரணமாக, டெல்லி முதல்வர் இல்லத்திலிருந்து ஹேமந்த் சோரன் 18 மணிநேரமாகத் தலைமறைவாகிவிட்டார். ஊடக தகவலின்படி, இரவு நேரத்தில் ஹேமந்த் சோரன் முகத்தை மூடிக்கொண்டு, திருடனைப் போல நடந்தே வீட்டைவிட்டு ஓடிவிட்டார். அவருடன் டெல்லி சென்ற சிறப்பு பிரிவு பாதுகாப்பு அதிகாரி அஜய் சிங்கையும் காணவில்லை என தெரிவித்திருந்தது பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருந்தது.இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சோரன் வீட்டிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதையடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன் மாயம் எனும் தகவல் மீடியாவில் வரத் தொடங்கிய நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காரிலேயே பயணம் செய்து டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு வந்துள்ளார். பின்னர் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தன்னை அமலாக்கத் துறையினர் கைது செய்தால் ஹேமந்த் சோரன் தனது மனைவியை முதல்வராக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கசிந்த நிலையில் நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் அவரது மனைவி கல்பனாவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இன்று ஜார்க்கண்டில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத்துறையின் கேள்விக்கு பதிலளிப்பதாக கடிதம் மூலம் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்