Skip to main content

முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து!

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Ex-minister Selvaganapathy's prison sentence cancelled

 

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 1995 முதல் 1996 ஆம் ஆண்டு ஆண்டு வரையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி பதவி வகித்து வந்தார். அப்போது தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டி.எம்.செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜே.பி.ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்ட 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014 ஆண்டு தீர்ப்பளித்தது. அதே சமயம் கூட்டுச் சதி என்ற குற்றச்சாட்டில் இருந்து இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனர்.

 

இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பில், “சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் பணிகள் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு ஒன்றை ஆண்டுகள் கழித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. சுடுகாடுகளுக்கு சுற்று சுவர் இல்லாததாலும் திறந்த வெளியில் அமைந்திருந்ததாலும் அப்பகுதியில் உள்ளவர்களால் கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன. புகார் அளித்த ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தவில்லை. உரிய ஆய்வு நடத்தாமல் சிபிஐ திடீரென அறிக்கை தாக்கல் செய்தது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு. எனவே தீர்ப்பை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

 

Ex-minister Selvaganapathy's prison sentence cancelled

 

அதே சமயம் சிபிஐ தரப்பில் வாதத்தை முன் வைக்கையில், “மத்திய அரசின் திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஓப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகளுக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. இதில் தலா 29 லட்சம் ரூபாய் தொகை பெற்றுக்கொண்ட நிலையில்  சுமார் 17 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் நடைபெற்றன. இதனால் இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன” என வாதிடப்பட்டது.

 

Ex-minister Selvaganapathy's prison sentence cancelled

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கடந்த 9 ஆம் தேதி பதிவு செய்து கொண்ட நீதிபதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்