மக்களவை தேர்தலை அறிவித்த தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் குறித்து மேலும் கூறியதாவது: ’’17-வது மக்களவை தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க, பாதுகாப்பு படையினர் உரிய நடவடிகை எடுப்பார்கள்.
2019ம் ஆண்டின் மக்களவை தேர்தலுக்காக 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் VVPATகருவி பயன்படுத்தப்படும். வாக்காளர்கள் வாக்களிக்கும்போது எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார் என்பதையும் தற்போது உறுதி செய்ய முடியும். பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். வாக்குசாவடி மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கேட்க தனி ஆப் அறிமுகம் செய்யப்படும்.
மக்களவை தேர்தலில் 17.4 லட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 1950 என்ற இலவச எண்ணில் வாக்குப்பதிவு தொடர்பாக புகார் அளிக்கலாம். வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் செல்போன் செயலி மூலம் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள். இந்த தேர்தலில் மொத்தம் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 18 வயது முதல் 19 வயது வரை 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.