Skip to main content

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்