Skip to main content

கல்விக்கடனை வசூலிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது! ராமதாஸ்

Published on 14/03/2018 | Edited on 14/03/2018


 

படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை மாறி, வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட நிலையில், அதற்கேற்றவாறு கல்விக்கடன் வசூல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். படித்து முடித்த மாணவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை கடன் தவனையாக வசூலிக்கும் வகையில் கல்விக் கடன்கள் சீரமைக்கப்பட வேண்டும். அது தான் சாத்தியமான, யதார்த்தமான ஏற்பாடாக அமையும். அதற்கு மாறாக அக்கடன்களை தனியாரிடம் விற்பனை செய்வது  மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். கல்விக்கடனை வசூலிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை மிரட்டி வசூலிக்கும் பணியை பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறை வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளன. வங்கிகளின் மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் ரூ.65,000 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில், 30&35% கடன்களை, அதாவது சுமார் ரூ.20,000 கோடியை தமிழகத்தைச் சேர்ந்த 10  லட்சம் மாணவர்கள் வாங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட கல்விக் கடனில், 3.66 லட்சம் மாணவர்கள் வாங்கிய ரூ.6364 கோடி வாராக் கடனாக மாறியிருக்கிறது. இவற்றில் பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.1565 கோடி வாராக்கடனில் ரூ.915 கோடி வாராக்கடன் தனியார் கடன் வசூல் நிறுவனங்களிடம் விற்கப்பட்டிருக்கிறது. இதேபோல், இந்தியன் வங்கிக்கு சொந்தமான ரூ.76.49 கோடி வாராக் கடனும், பேங்க் ஆப் இந்தியாவின் ரூ.38.66 கோடி வாராக்கடனும் தனியார் கடன் வசூல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ள கடனில் பெரும்பாலானவை தமிழகம், கேரளத்தை சேர்ந்தவையாகும்.
 

பொதுத்துறை நிறுவனங்களின் இந்த செயல் பொறுப்பற்றதும், மனிதாபிமானமற்றதும் ஆகும். கல்விக் கடனைப் பொறுத்தவரை வாராக் கடன் என்பது பெரிய குற்றமல்ல; இன்னும் கேட்டால் அது தவிர்க்க முடியாதது ஆகும். கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்கள் வேலை கிடைத்த உடனோ அல்லது படிப்பை முடித்த ஓராண்டிலேயோ கல்விக் கடன் தொகையை செலுத்தத் தொடங்க வேண்டும். இந்த கெடுவைத் தாண்டி  3 மாதங்கள்  கடன் தவணை செலுத்தப்படவில்லை என்றால் அது வாராக்கடனாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இன்றுள்ள சூழலில் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படித்த மாணவர்களில் பெரும்பான்மையினருக்கு 10 ஆண்டுகள் கழித்து கூட தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை. அவர்களால் கல்விக் கடனை செலுத்த முடியாததற்கு இதுவே காரணமாகும்.

 

Ramadhoss


 

படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை மாறி, வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட நிலையில், அதற்கேற்றவாறு கல்விக்கடன் வசூல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். படித்து முடித்த மாணவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை கடன் தவனையாக வசூலிக்கும் வகையில் கல்விக் கடன்கள் சீரமைக்கப்பட வேண்டும். அது தான் சாத்தியமான, யதார்த்தமான ஏற்பாடாக அமையும். அதற்கு மாறாக அக்கடன்களை தனியாரிடம் விற்பனை செய்வது  மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். கடன் வசூல் நிறுவனங்களிடம் கல்விக் கடன்களை விற்பனை செய்வது என்பதே சட்டவிரோதமானது ஆகும். இந்த முறையில் ஒரு வங்கியிடம் ரூ.1000 கோடி கல்விக்கடன் இருந்தால், அதை தனியார் நிறுவனங்கள் ரூ.400 முதல் ரூ.450 கோடிக்கு வாங்கிக் கொள்ளும். அந்தப் பணத்தை தனியார் நிறுவனங்கள் உடனடியாக செலுத்தாது. மாணவர்களிடம் பணத்தை வட்டியும், முதலுமாக வசூலித்து தாங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள பணத்தை தான் வங்கியில் செலுத்தும். அதிலும் கூட ஒரு பகுதி கடைசியில் தள்ளுபடி செய்யப்படக் கூடும்.
 

அதேநேரத்தில் வாராக் கடனை வசூலிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் சாம,பேத, தான, தண்ட முறைகளை தனியார் நிறுவனங்கள் கையாளும். தினமும் தொலைபேசியில் மாணவர்களை தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள் மிரட்டலாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசும். வேலை கிடைக்காததால் ஏற்கனவே குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் தினமும் அவமரியாதைகளை எதிர்கொண்டு வரும் மாணவர்கள், இப்போது கல்விக் கடனுக்காக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் மரியாதைக் குறைவான நெருக்கடிகளால் அவமானமடைந்து தவறான முடிவுகளை எடுக்கக்கூடும். மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் கல்விக் கடன் வாங்கியிருந்த லெனின் என்ற மாணவரின் கல்விச் சான்றிதழ்களை பறித்துச் சென்ற தனியார் நிறுவனம், தொடர்ந்து மிரட்டலும் விடுத்து வந்ததால் கடந்த 2016-ஆம் ஆண்டு   ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் இப்போது வாராக்கடன்களை தனியாருக்கு விற்பனை செய்திருப்பதால் இத்தகைய தற்கொலைகள் அதிகரிக்கும்.
 

கடந்த காலங்களில் கேரள மாணவர்களின் கல்விக் கடன்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட போது அம்மாநில அரசு தலையிட்டு, அந்த முடிவை திரும்பப் பெறச் செய்தது. ஆனால், தமிழக அரசு  இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களின் நலன்களை காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, தமிழக அரசும் வங்கி நிர்வாகங்களிடம் பேசி தமிழக மாணவர்களின் கடன்கள் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.
 

இதெற்கெல்லாம் மேலாக 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையின் 39&ஆவது பக்கத்தில்,‘‘வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையின்றி உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்’’ என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே செலுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை நாளைய நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்