அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சாலைகளில் பல ட்ரக்குகள் பிணக்குவியல்களுடன் நிறுத்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 11.3 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், 61,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அதில் நியூயார்க் நகரம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நியூயார்க்கில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 18,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான மக்களை இழந்துவரும் நியூயார்க் நகரம், உடல்களைப் புதைக்கவும், பாதுகாத்து வைக்கவும் இடமில்லாத அவலநிலையை அடைந்துள்ளது.
இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு இடமில்லாமல் தவித்து வரும் அந்நகர நிர்வாகம், மிகப்பெரிய குழிகளைத் தோண்டி, அதில் குவியல் குவியலாகப் பிணங்களைப் போட்டுப் புதைத்து வருகிறது. அதேபோல இறுதிச் சடங்குகளைச் செய்யும் மையங்களில், குளிரூட்டப்பட்ட அறைகள் என அனைத்தும் நிரம்பிவழியும் நிலையில், சடலங்களை வைக்கும் பைகளும் பல இடங்களில் காலியாகியுள்ளன. இந்நிலையில் அந்நகரத்தில் பல்வேறு இடங்களில், உடல்கள் நிரம்பிய ட்ரக்குகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
புரூக்ளின் பகுதியில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் ஒரு கட்டிடத்துக்கு வெளியே, கடந்த சில வாரங்களாக ஒரு கண்டெய்னர் லாரி நின்றுள்ளது. கடந்த சில நாட்களாக இதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் இதுகுறித்து அரசு நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த கண்டெய்னருக்குள் சுமார் 40 உடல்கள் ஒன்றின்மீது ஒன்று போடப்பட்டு வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகுதான் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பல லாரிகளில் உடல்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து பல நாட்களாக இந்த உடல் ட்ரக்குகளிலேயே வைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் முழுதும் துர்நாற்றம் வீசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துவரும் சூழலில் இதனைக் கையாள முடியாமல் அந்நகர நிர்வாகம் திணறி வருகிறது.