கஜா புயலின் கோரத்தாண்டவத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் வேம்பங்குடியில் கடும் பாதிப்புக்கு உள்ளான தென்னை தோப்புகளை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பார்வையிட்டார்.
கீரமங்கலம், நகரம் மற்றும் வேம்பங்குடி ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டுள்ள தென்னை, பலா, மற்றும் வீடுகளை பார்வையிட்ட பா.ஜ.க வின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் முழுமையாக தென்னை, பலா, வாழை போன்ற மரங்கள் சாய்ந்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால் மீட்புப்பணிக்கு போதுமான ஆட்கள் வராததால் அந்தந்த கிராம இளைஞர்களே மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக தமிழக அரசு அனைத்து கிராமங்களுக்கும் மீட்புக்குழுவினரை அனுப்பி குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு சார்பில் நாங்கள் பார்வையிட்ட பிறகு விரைவில் பிரதமர் நிவாரணம் அறிவிப்பார். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
அப்போது நகரத்தில் ஒரு விவசாயி, ’மத்திய அரசு நிவாரணத்தை தமிழக அரசுக்கு அனுப்பாமல் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைத்தார். அதற்கு எச்.ராஜா, ’அதற்கான நடவடிக்கை’ எடுக்கப்படும் என்றார்.