
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் ஜூன் ஏழாம் தேதி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்தபடி 400 இடங்கள் கிடைக்காதது குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிப்பெரும்பான்மை கட்சியாக பாஜக உருவெடுக்க முடியாதது ஏன்? 291 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுவதற்கான காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதலமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
அதேபோல் 17வது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை அளித்துள்ளது. இந்நிலையில் வரும் சனிக்கிழமை ( ஜூன்8 ) பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.