சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக நேற்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைத்தது மாநகராட்சி அதிகாரிகள். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. அதில் தமிழக அரசையும், அரசியல் கட்சிகளை குறித்தும் சரமாரி கேள்விளை எழுப்பி வருகிறார்கள் நீதிபதிகள்.
“பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம், உயரிழப்புக்கு ரூ.2 இலட்சம் கருணைத் தொகை தந்தால் பிரச்னை முடிந்துவிடும் என்று அரசு நினைக்கிறதா? இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? விதிகளை மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே?
சுபஸ்ரீ'யின் இத்தனை ஆண்டு வளர்ச்சிக்கு அவர் பெற்றோர் மட்டுமல்ல சமுதாயத்தின் பங்கும் உள்ளது. நாட்டில் பொதுமக்களின் உயிருக்கு 1 சதவீத மதிப்பு கூட இல்லை. அரசியல் கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்தால் மட்டும் தான் விருந்தினர்கள் வருவார்களா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.
மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையை சேதப்படுத்தி ஆளும் கட்சியின் கொடி வைக்க யார் அனுமதி கொடுத்தது? குற்றம் நடக்க அனுமதித்துவிட்டு பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுவதையே அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது” என்றும் தெரிவித்தனர்.
இறுதியாக, 2.15 மணிக்கு காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.