தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (15.12.2024) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.
நேற்று (13.12.2024) லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (14.12.2024) அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். எனவே இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (16.12.2024) இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17ஆம் தேதி நாகப்பட்டினம். திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கன மழை எதிரொலியாகத் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று மற்றும் நாளை கோயிலுக்கு வர வேண்டாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.