சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மீது பல்கலைகழக பேராசிரியர் பணி பதவி உயர்வுக்கு இலட்சம் கேட்டதாக பிடிப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் அடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக பேராசிரியர் கல்வியல் கல்லூரி ஆய்வுக்கு சென்ற இடத்திற்கு லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. விசாரணை செய்வது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் மூலம், கல்வியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதிதாக தொடங்கப்படும் கல்வியியல் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் 2 பேர் கொண்ட குழு கல்வி வாரியம் சார்பில் நியமிக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் பல்கலைக்கழக அளவில் உள்ள துறைத்தலைவர்கள் அல்லது பேராசிரியர்கள் இடம்பெற்று இருப்பார்கள். இவர்கள் புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்லூரிகளில் தேவையான பாடத்திட்டங்கள் முறையாக உள்ளதா?. மாணவ-மாணவிகளுக்கு போதுமான கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து, அதன் அறிக்கையை தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்த அறிக்கையின் படி தான் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய அங்கீகாரம் வழங்கப்படும். ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்து வழங்கப்படும். அதன்படி தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தால் அமைக்கப்பட்டு இருந்த 2 பேர் குழுவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையின் தலைவர் ஆனந்தன் என்பவரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பேராசிரியரும் இடம்பெற்று இருந்தனர். இவர்கள் இந்தியாவில் பல்வேறு கல்வியியல் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் கட்டுமானம், மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதி மற்றும் தகுதி இல்லாத பல்வேறு கல்லூரிகளுக்கு, கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்திற்கு அவர்கள் மீது புகார் சென்றது. அந்த புகாரின் பேரில் இருவர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் இருவர் மீதும் கூறப்பட்ட புகார் உண்மை என்றும், அவர்கள் இருவரும் பல கல்லூரிகளுக்கு சாதகமான அறிக்கை தாக்கல் செய்ய கோடி கணக்கில் லஞ்சம் பெற்று இருப்பதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஆனந்தன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் பரிந்துரை செய்தது. அதன்படி சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது பல்கலைக்கழகம் சார்பில் விசாரணை கமிட்டி அமைத்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வடமாநில பல்கலைக்கழக பேராசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்த போது, “கடந்த 2016-ம் ஆண்டில் இந்த முறைகேடு நடந்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை விரைவில் முடிவடையும். அதன் பிறகு தான் நடவடிக்கை எடுப்பது குறித்த விவரம் தெரிய தெரியவரும்’’ என்கிறார்கள்.