மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி சென்று நரசிம்மராவுடன் இருப்பார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியதால் 14 வருசத்துக்கு முன்ன மறைந்த நரசிம்மராவ் இப்போ பிரதமரா? அவருடன் தம்பிதுரை பேசுகிறாரா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இவ்விழாவில் பங்கேற்றார். விழாவில் பங்கேற்க வேண்டிய தம்பிதுரையின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது, தம்பிதுரையை புகழ்ந்து பேசினார். அப்போது அவர்,
‘’அவருடையை தொகுதி பரமத்தி வேலூர் வரை இருக்கிறது. காலையில் அங்கே இறங்கி பேசிவிட்டு ஊர் ஊராக மின்னல் வேகத்தில் வருவார். மத்தியான சாப்பாடு வேடசந்தூர். சாயங்கால சாப்பாடு புதுக்கோட்டை. அப்புறம் இன்னொரு தொகுதிக்கு போயிடுவார். போயிட்டு டெல்லிக்கு போய் சேர்ந்திட்டு நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார்’’
என்று தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், கடந்த 2004ம் ஆண்டில் டிசம்பர் 23ம் தேதி மறைந்தார். 14 வருடங்களுக்கு பின்னர் அவர் இப்போது பிரதமராக இருப்பது போலவும், அவர் டெல்லியில் இருப்பது போலவும், அவரை தம்பிதுரை சந்தித்து பேசுவது போலவும் சீனிவாசன் பேசியதால், என்னது ...14 வருசத்துக்கு முன்ன மறைந்த நரசிம்மராவ் இப்போ பிரதமரா? அவருடன் தம்பிதுரை பேசுகிறாரா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.