
எழையாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச்சேர்ந்த 515 கணேசன். அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை...ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர் கணேசன்.
ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவர் கணேசன்.

கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்த இரக்க முள்ளவரின் வீட்டையும் இரக்கமில்லாமல் கஜா புயல் காவு வாங்கி விட, அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய் விட்டார். இதை கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த வீட்டை நேரில் போய் பார்த்து உடனடியாக புதிய வீட்டை கட்டிக் கொடுக்க முடிவெடுத்து அதற்கான பூமி பூஜையை இன்று துவக்கி இருக்கிறார்.

சாதாரண வீடு மாதிரி இல்லாமல் எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும். வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பாத்திரங்கள், கட்டில், பீரோ, மின் விசிறி , ஏ.சி. என்று வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வீடு கட்ட சுமார் 7.50 லட்ச ரூபாய்க்கு மேலே ஆகும். மற்ற செலவுகளுக்கு 2.50 லட்சம் செலவு ஆகும். மொத்தம் பத்து லட்சம் ஆகலாம் என்றாலும் பரவாயில்லை. ஏனென்றால் அவரை என் அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன் என்கிறார் ராகவா லாரன்ஸ்.