ஏப்ரல் 4 - மைக்ரோசாப்ட் நிறுவப்பட்ட நாள்

"பில் கேட்ஸ்" என்ற மனிதர் உலகம் எங்கும் ஏன் பட்டி தொட்டி எங்கும் கூட பிரபலமானவர். அப்படி அவர் பிரபலமானது உலக பணக்கார்கள் பட்டியலில் அவர் முதலிடம் வந்த பின்புதான். இந்தக் கணினிமயமான உலகத்தில் தொழில்நுட்பத்திலும் மேலும் பல்வேறு கணினி சம்மந்தமான விஷயங்களிலும் முதன்மை பெற்று இருக்கிறது இவரது மைக்ரோசாப்ட் நிறுவனம். மாணவனாக இருந்தபோதே பில் கேட்ஸ், பவுல் அலன் என்ற நண்பருடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை நியூ மெக்சிகோவில் ஏப்ரல் 4 1975 ஆம் ஆண்டு நிறுவியிருக்கின்றனர். அதாவது மைக்ரோசாப்ட் என்ற ஒரு சாப்டவேர் நிறுவனம் பிறந்து நாற்பத்தி மூன்றாம் வருடத்தை எட்டி பார்க்கிறது. அதனால், மைக்ரோசாப்ட்டை பற்றியும் பில் கேட்ஸை பற்றியும் சில சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயர் முதன் முதலில் மைக்ரோ - சாப்ட் என்று இருந்துள்ளது. மைக்ரோ என்பது மைக்ரோகணினி என்றும். சாப்ட் என்பது சாப்டவேர் என்று குறீயீடாக வைத்து ஆரம்பித்துள்ளனர். பின்னர் அடுத்த வருடமே குறுக்கே உள்ள ஹைபனை மட்டும் எடுத்துவிட்டு மைக்ரோசாப்ட் என்று மாற்றிவிட்டனர்.
2013 ஆம் ஆண்டின் படி பில் கேட்ஸ் 11.5 பில்லியன் சம்பாரித்துள்ளார். அப்படி பார்த்தால் ஒரு நாளுக்கு 33.3 மில்லியன், ஒரு மணி நேரத்திற்கு 1.38 மில்லியன், ஒரு நிமிடத்திற்கு 23,148 டாலர் என்று பிரித்து வைக்கலாம்.

கடந்த ஆண்டின் உலக பணக்காரர்களில் பில் கேட்ஸ் 86 பில்லியன் மொத்த தொகையுடன் முதல் இடத்தை பிடித்தார், இது தொடர்ந்து நான்காவது முறையாக முதல் இடம் பிடித்துள்ளார், போர்ப்ஸ் பத்திரிகையின் வரிசைப்படி.
பள்ளிப் பருவத்தில் எல்லோரும் கணினியை வைத்து கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பில் கேட்ஸ் புரோகிராமிங் செய்யத் தொடங்கிவிட்டார். பில் கேட்ஸ் கணினியில் செய்யும் கோடிங்கை பார்த்து பள்ளி நிர்வாகம் ஆச்சரியப்பட்டு ஒரு வேலை இவருக்கு அளித்தது. பள்ளியில் மாணவர் வருகை, இருக்கை ஒதுக்கீடுக்கு தேவையான மென்பொருள் ஒன்றை செய்யச் சொன்னது. பில்லோ அதில் விஷமத்தனமாக பள்ளியில் இருக்கும் அழகான பெண்கள் அவரை சுற்றி இருப்பது போன்று கோடிங் செய்து கொடுத்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் படிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பி உழைப்பார்கள். பில்லுக்கு அந்த வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்குவதற்காக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.
1987 ஆம் ஆண்டில் அவருக்கு வயது முப்பத்தி ஒன்று. அப்போதே அவர் பில்லியனர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். 1996 ஆம் ஆண்டில் 12.8 பில்லியன் மொத்த சொத்துடன் உலக பணக்காரர்களில் முதலிடம் பெற்றார் பில் கேட்ஸ்.
'க்ஸனாடு 2.0' என்னும் அவருடைய எஸ்டேட்டை 1988 ஆண்டு இரண்டு மில்லியன் டாலருக்கு வாங்கினார். அதன் மொத்த அளவு சுமார் 66,000 சதுர அடி, அதில் தான் அவரது சகலவசதிகொண்ட வீடு இருக்கிறது. அது வீடு இல்லை அரண்மனை. இந்த எஸ்டேட்டின் தற்போதைய மதிப்பு சுமார் 123 மில்லியன்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் அது விண்டோஸும், வேர்டும் தான். அந்த விண்டோஸ் 95 ஆன் செய்யும் போது வரும் ஏழு நொடி இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அந்த இசையை இயக்கியவர் "பிரியன் இனோ" என்பவர் தான்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு போட்டி என்று ஒரு நிறுவனம் இருந்தால் அது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆரம்பித்த ஆப்பிள் நிறுவனமாகத்தான் இருக்கும். இந்த இரண்டு நிறுவனமும் மெக்கிண்டாஷ் என்ற கணினியை கண்டுபிடிக்கும் வரை ஒன்றாக சில வருடங்கள் வேலை பார்த்தும் இருந்திருக்கிறார்கள். விண்டோஸ் என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு வந்த பின்னர் தான் இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவியிருக்கிறது.
'டேட்டா லிங்க்' என்ற ஸ்மார்ட் வாட்ச்சை 1994 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கன்பிடிப்பதற்கு 12 வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்திருக்கின்றனர். இருந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் மோசமான ஒன்றாக இருக்கிறது. டைமிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இதை உருவாக்கியது.

ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகளை திருடிதான் பில் கேட்ஸ் விண்டோஸ் என்ற ஒன்றை கண்டுபிடித்தார் என்று பலரால் பேசப்பட்டு வந்தது. அதேபோன்று இரு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டது. பின்னொரு காலத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட தொய்வினால் வங்கியில் 150 மில்லியன் வரை இழப்புகள் கட்டவேண்டியிருந்திருக்கிறது. அந்தப் பணத்தை பில் கேட்ஸ் கொடுத்து உதவியதாக ஸ்டீவ் ஜாப்ஸே சிஇஓ வாக அவரது முதல் மேடையில் கூறியிருக்கிறார்.
பில் கேட்ஸ் இரண்டு முறை போலீசார்களால் கைது செய்யப்பட்டுள்ளார். 1975 ஆம் ஆண்டு லைசன்ஸ் இல்லாமலும் மற்றும் வேகமாக கார் ஓட்டியதற்காவும் கைது செய்யப்பட்டார். 1977 ஆம் ஆண்டும் இதே போன்று லைசன்ஸ் இல்லாமலும், காரை போலீசார்கள் நிப்பாட்ட சொல்லியும் நிப்பாட்டாமல் போனதற்காகவும் கைது செய்யப்பட்டார்.
பல பில்லியன்களுக்கு அதிபதி, இவரது சொத்து மதிப்பு 140 வளரும் நாடுகளின் ஜிடிபியாக இருக்கிறது. இருந்தாலும் இவர் தனது சொத்தில் கால் வாசியை மட்டுமே தன் மூன்று குழந்தைகளுக்கு பிரித்து தருவதாகவும் மற்ற முக்கால்வாசி சொத்தை பில் கேட்ஸ் பவுண்டேசன் என்ற அவரது டிரஸ்டுக்கு தரப்போவதாக 2014 ஆம் ஆண்டு தெரிவித்திருக்கிறார்.