Skip to main content

'இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என அரசு தீர்மானித்து விட்டதா?'-பாமக ராமதாஸ் கேள்வி

Published on 25/03/2025 | Edited on 25/03/2025
 'Has the government decided not to appoint teachers anymore?' - PMK's Ramadoss asks

'இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழக அரசு தீர்மானித்து விட்டதா?' என பாமக நிறுவனர் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2025 ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. டிசம்பர் மாத இறுதியிலேயே வெளியிடப்பட்ட இருக்க வேண்டிய ஆண்டு திட்டத்தை 3 மாதங்கள் தாமதமாக இப்போது தான் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது என்றாலும் கூட, அது ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரை ஏமாற்றி இருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டில் என்னென்ன பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறித்த விவரங்களை ஆசிரியர்  தேர்வு வாரியம் வெளியிடாததை குறை கூறி, கடந்த 5 ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தான் ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டிருக்கிறது.

2025 ஆம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை. அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன. கல்லூரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிக்கை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தாலும், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தாலும் ஏற்கனவே அறிவிக்கை  செய்யப்பட்டவை.

nn

1915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும். 2023ம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் அறிவிக்கை செய்யப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களையும், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கை செய்யப்பட்ட 2768 இடைநிலை ஆசிரியர்களையும்  தேர்வு செய்யும் பணிகள் ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவடையவில்லை. இத்தகைய சூழலில்  புதிய ஆள்தேர்வு அறிவிப்புகள் திட்டமிட்டபடி செயல்வடிவம் பெறுமா? என்பதே பெரும் வினா தான்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து அனைவரும் எதிர்பார்த்தது ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையைத் தான். தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. அதன்பின், கடந்த ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. 2025 ஆம் ஆண்டிலாவது தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர்.  ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியவில்லை. அடுத்த சில மாதங்களில் நடப்பாண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்து லட்சக்கணக்கான மாணவர்கள்  ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியைப் பெற்றிருப்பார்கள். அவர்களும் தகுதித்தேர்வில் பங்கேற்கும் வகையில் ஜூன் மாதத்தில் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அதை தேர்வு வாரியம் செய்யவில்லை.

மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதில்லை. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் நலனில் தமிழக அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான். இது அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை திமுக அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.

கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பு ஆட்சிக்காலத்தில் தான் கல்வித்துறை மிகவும் மோசமான சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களையே நியமிக்காமல் அரசுப் பள்ளிகளில் தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? எனத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்