CM MK Stalin says No one can escape the clutches of the law

தமிழக சட்டமன்றப் பேரவையில், திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை சம்பவம் தொடர்பாக இன்று (19.03.2025) கவன ஈர்ப்பு தீர்ப்பு கொண்டுவரப்பட்டது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில், “திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.

Advertisment

இதிலே பல்வேறு உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் தங்களது பெயர்களைக் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள். அவர்களை மட்டும் இங்கே பேசஅனுமதிக்காமல், இதிலே கவன் ஈர்ப்பு கொடுக்காதவர்களும் பேசியிருக்கிறார்கள் என்றால், இதில் இந்த அரசு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நீங்கள் எப்படி இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தங்களுடைய பெயர்கள் இடம் பெறவேண்டுமென்று கருதி, பேசி இடம் பெற்றிருக்கிறீர்களோ, அதைப்போல், இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், அதே அக்கறையோடு நிச்சயமாக சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையில் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரம், மூர்த்தி ஜஹான் தைக்கா தெரு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் என்பவர் நேற்று அதிகாலை திருநெல்வேலி மாநகர தெற்கு மவுண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சில நபர்கள் வழி மறித்து தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜாகீர் உசேனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக திருநெல்வேலி தொட்டி பாலத் தெருவைச் சேர்ந்த இருவர் திருநெல்வேலி குற்றவியல் நடுவர் 4இல் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மற்றவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கொலையுண்ட ஜாகீர் உசேன் கடந்த 08.01.2025 அன்று அவரது முகநூல் பக்கத்தில் ஒரு காணொலி வெளியிட்டுள்ளது பற்றியும், அதில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, மறைந்த ஜாகீர் உசேனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற முகமது தௌபிக் என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஒரு பிரச்சினை இருந்து வந்துள்ளது.இடப்பிரச்சனை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்கிற முகமது தௌபிக் மற்றும் அவரது மைத்துனர் அக்பர்ஷா ஆகியோர், ஜாகீர் உசேன் மீதும், ஜாகீர் உசேன் எதிர்த்தரப்பினர் மீதும் மாறி, மாறி புகார் மனுக்களை அளித்துள்ளனர். இவற்றின்மீது காவல் துறையினரால் சமுதாயப் பதிவேடு எண்கள், அதாவது, சி.எஸ்.ஆர். (CSR) எண்களும் வழங்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜாகீர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, ஏற்கெனவே பதியப்பட்ட சி.எஸ்.ஆரின் அடிப்படையில் அவரை அச்சுறுத்துவதாகக் குறிப்பிட்ட எதிர்த்தரப்பினரை திருநெல்வேலி மாநகர காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் துறையினர் விசாரித்துள்ளனர்.

Advertisment

CM MK Stalin says No one can escape the clutches of the law

இவ்வாறு விசாரணை நடைபெற்றுவரும் சூழ்நிலையிலேயே, நேற்றையதினம் இந்தக் கண்டிக்கத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. இக்கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாரபட்சமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது. இந்தக் கொலை வழக்கு மட்டுமல்ல, எந்தக் குற்றத்தில் ஈடுபடுபவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார்.