
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளோடு திரைப் பிரபலங்கள் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் கௌதம் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசுகையில் “திருமாவளவனுடைய அரசியல் ஆளுமையும் அறிவார்ந்த ஆழமும் தான் இந்த அங்கீகாரத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சமூகத்துடைய தலைவர் இல்லை. நம் எல்லாருக்குமான தலைவர். ஏன் அவரை எல்லோருக்குமான தலைவர் எனச் சொல்கிறோம் என்றால் அவர் உள்ளார்ந்த அரசியலைப் பேசுபவர். உள்ளார்ந்த அரசியல்தான் ஒரு தேசிய இனத்தை ஒருமைப்படுத்தி அதற்கு எதிரான சக்திகளை வீழ்த்துவதற்கான முதல் படி.
அவர் நம்முடைய எதிரிகள் யார், அவர்களை வீழ்த்துவதற்கு நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறார். அது எனக்கு அவரிடம் ரொம்ப பிடித்தது. நம்முடைய எதிரிகள் யார் என்பதை தீர்மானிக்காமல் சண்டை போடுவது, அது எதிரிகளுக்குத் தான் பலமாக மாறும்.
அவர் ரொம்ப தெளிவாக பிரிவினை வாதம், சனாதனம் அகியவைக்கு எதிரான நிலைப்பாடை எடுத்து, இந்த சூழலில் யாரை ஆதரிக்க வேண்டும் யாரை எதிர்க்க வேண்டும் என்கிற தெளிவோடு செயல் படுகிறார். அந்த தெளிவுதான் அவரை நம் எல்லாருக்குமான தலைவராக மாற்றுகிறது. திருமாவளவனையும் வி.சி.க.வையும் நமக்கான அவசியமான ஒன்றாக மாற்றுவதும் அந்த தெளிவுதான். இந்த தெளிவு நம் எல்லாருக்கும் ஏற்புடையதாக இருப்பதால்தான் இந்த தேர்தல் அங்கீகாரம். அவருடைய அரசியல் நிலைப்பாட்டில் நான் துணை நிற்கிறேன்” என்றார்.