Skip to main content

"தலைமறைவு என்பதே போலீஸ் பாதுகாப்போடு இருப்பது தான்.." - வே. மதிமாறன் தடாலடி பேட்டி!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

தனி நாடு, தனி கொடி என்று பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற நித்யானந்தா பற்றிய பேச்சுக்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதை பற்றியும், குடியுரிமை மசோதா தொடர்பான கேள்விகளையும் பெரியாரிஸ்ட் மதிமாறனிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

h



குடியுரிமை மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத நபர்கள் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்பதை இந்த மசோதா உறுதி செய்திறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இன்றைய மத்திய பாஜக அரசு, தன்னுடைய கட்சியை போன்றே மத்திய அரசையும் நடத்தி வருகிறது. தன்னுடைய கட்சியில் என்ன தீர்மானம் போடுகிறார்களோ அதை போலவே நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து அதை நிறைவேற்றுகிறார்கள். மக்கள் அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி வழங்கிவிட்டார்கள். அதற்காக மக்களின் எல்லா விதமான உரிமைகளையும் பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது. இந்த நாடு ஒரு இந்துத்துவ நாடாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் இருக்கக் கூடாது, ஒரு மேல்சாதி இன மேன்மை இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றைக்கு அரசாலுகிறார்கள். அவர்களிடம் மனிதத்தன்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. குறிப்பிட்ட மூன்று நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழப்படும் என்று அறிவிக்கிறார்கள். 

அதாவது இந்து, புத்த, கிருஸ்துவர்கள் என ஆறு பிரிவை இவர்கள் கூறுகிறார்கள். முஸ்லிம் நாட்டில் இந்தகைய பிரிவினர் அதிகம் இருக்க போவதில்லை. அங்கு முஸ்லிம் மக்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். இந்நிலையில் இத்தகைய சட்டத்தை கொண்டுவந்ததன் மூலம் எப்படியாவது முஸ்லிம்களை தனிமைப்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்படிதான் முத்தலாக் விவகாரத்தில் தலையிட்டார்கள். நமக்கெல்லாம் ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு ஏதோ தனிச்சட்டம் இருப்பதை போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி இந்த சட்டத்தையும் நிறைவேற்றினார்கள். அவர்கள் இந்தியாவில் மற்ற மதத்தினர் போன்று மதிக்கப்படுகிறார்களா? நான்கு பேர் இரவு நேரத்தில் வந்தால் உரிய ஆவணம் இருந்தாலும் முஸ்லிமாக இருந்தால் அவர்களை காவல்துறையினர் தனிமைப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் என்ன சுதந்திரம் இருக்கிறது. அவர்களின் இன்றைய நிலைமை என்பது கவலைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட், கடவுள் மறுப்பாளர். சமீபத்தில் நித்யானந்தா விவகாரத்தை பார்த்திருப்பீர்கள். அவர் மீது உள்ள வழக்கின் காரணமாக அவர் தலைமறைவாக இருக்கிறார்? இந்திய அரசு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறுகிறது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

அவர் எங்கே தலைமறைவாக இருக்கிறார். நீங்கள்தான் அப்படி சொல்கிறீர்கள். அவர் தினமும் வீடியோ வெளியிட்டுக்கொண்டு நல்ல முறையில் தான் இருக்கிறார்கள். அவருக்கு ஆதரவாக ஒருவர் வீடியோ போடுகிறார். அவர் யார் என்று பார்த்தால் பத்திரிக்கையில் வேலை செய்யும் பெண்களை பற்றி தவறாக பேசி காவல்துறையால் தேடப்பட்டவர். அவரை ஏன் பிடிக்கவில்லை என்று நீதிமன்றம் கேட்டதற்கு அவர் தலைமறைவாகிவிட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தார்கள். ஆனால், அவர் எஸ்பி கூடவே விழாக்களுக்கு சென்று வந்த புகைப்படங்களை நாம் பார்த்தோம். இந்த நிலைமையில்தான் நம்முடைய அதிகாரிகள் இருக்கிறார்கள். இங்கு தலைமைறைவு என்பது போலீஸ் பாதுகாப்போடு இருப்பது என்பதே பொருள். நித்யானந்தா பிற்படுத்த சமூகத்தை சேர்ந்தவர்தானே என்று ஒரு கேள்வியை நம்மை பார்த்து வைக்கிறார்கள். மோடி யார், ஆவர் என்ன உயர் ஜாதியை சேர்ந்தவரா? அப்புறம் ஏன் உயர்ஜாதியை சேர்ந்தவர்களும் அவரை ஆதரிக்கிறார்கள். அவர் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அதனால் அவர்களை ஆதரிக்கிறார்கள்.

பத்திரிக்கையில் வேலை செய்யும் பெண்களை தவறாக பேசியவர் நித்யானந்தாவிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார். தனி அறையில் நடந்ததை ஊடகங்கள் ஏன் காட்டின என்று கேள்வி வேறு எழுப்பியுள்ளார். நித்யானந்தா தன்னை முற்றும் துறந்த சாமி என்று சொல்கிறார். அப்படி இருக்கையில் அவரின் அராஜகத்தை ஊடகங்கள் காட்டக்கூடாதா? அப்படி காட்டியதால் அந்த தொலைக்காட்சிகளை தடை செய்ய சொல்வீர்களா, இதுதான் ஜனநாயகமா? மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறார் என்பதை ஊடகங்கள் கூறாமல் வேறு யார் கூறுவார்கள். அயோக்கியத்தனமான அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அதை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டா்கள். தான் சிவனுடைய அவதாரம் என்று சொல்கிற நபர் ஒரு மூன்றாம் தரம் பொறுக்கி போல நடந்துகொள்கிறார். அதனை இவர் நியாயப்படுத்துகிறார். இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் என்று யாராவது கூறுகிறார்களா? நாத்திகர்களை கடுமையாக விமர்சனம் செய்யும் நீங்கள், அவர்கள் இதுமாதிரி நடந்து பார்த்திருக்கிறீர்களா? ஒருபோதும் இந்து பெண்களை பற்றி அவர்கள் தவறாக பேசியது கிடையாது. தற்போது நித்யானந்தா மீது பெண்களை தாண்டியும் குற்றச்சாட்டுகள் தற்போது வந்து கொண்டிருக்கிறது. அவனா நீ?  என்ற ரேஞ்சிற்கு நித்தியானந்தா மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது. அவைகள் அனைத்தும் எவ்வாறு கொண்டு செல்லப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.