Skip to main content

இந்தியாவிலேயே மது குடிப்பவர்கள் அதிகமாக உள்ள மாநிலம்... குடிகார நாடா தமிழ்நாடு... அதிர்ச்சி தகவல்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

பண்டிகை நாட்களில் மது விற்பனை உச்சத்தில் இருப்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது. கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது மது விற்பனைக்கு 320 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி அரசே எதிர்பார்க்காத வகையில் 602 கோடிக்கு மது விற்பனையாகி அமோக வருமானத்தை அள்ளித் தந்தது டாஸ்மாக். அதே போல, தற்போதைய தீபாவளி பண்டிகையின் போதும் அதிக வருமானத்தை எதிர்பார்த்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கேற்ப, மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து செயலாற்றியுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

 

tasmac



இந்த நிலையில், பண்டிகைக் காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறதா? என டாஸ்மாக் நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, "இலக்கு நிர்ணயிப்பதெல்லாம் கிடையாது. ஆனால், பண்டிகை எந்த நாளில் வருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். உதாரணமாக, கடந்த வருடம் தீபாவளி செவ்வாய்க்கிழமை வந்தது. பண்டிகையின் முதல் நாளும் பண்டிகைக்கு அடுத்த நாளும் அரசு வேலை நாளாக இருந்தால் அந்த நாட்களை விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுகின்றன. அதை ஏற்றுக்கொண்டு அரசும் விடுமுறை அளிக்கிறது.

 

admk



அந்தவகையில் கடந்த வருடம் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அதனால், தீபாவளி மட்டுமல்ல அதற்கு முந்தைய 3 நாட்களும் கொண்டாட்ட நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால் விற்பனை அதிகரித்தது. இந்த தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்தது, முந்தைய நாள் சனிக்கிழமையும், தீபாவளி மறுநாள் திங்கள்கிழமையும் விடுமுறை என அறிவித்தது அரசு. இந்த முறை வெள்ளிக்கிழமை இரவிலிருந்தே தீபாவளி களை கட்டலாம் என கவனத்தில் எடுத்துக்கொண்டோம். அதனால், பண்டிகை நாளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அதற்கு முந்தைய பிந்தைய நாட்களையும் கணக்கில் கொண்டு வருவாயை கணக்கிடுவதால் இந்த முறையும் விற்பனை அதிகரிக்கும் என நினைக்கிறோம். அதேசமயம், மது வகைகளின் விலை அதிகரித்திருப்பதும் வருவாய் பெருக்கத்திற்கு காரணம். மற்றபடி, இலக்கு நிர்ணயிப்பதெல்லாம் கிடையவே கிடையாது'' என விவரிக்கின்றனர்.

 

states



தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் விசாரித்தபோது, "மது அருந்துபவர்களை மது பிரியர்கள், மது அடிமைகள் என இரு வகையாக பிரித்துக்கொள்ள வேண்டும். தினந் தோறும் குடிப்பவர்கள் அடிமைகள். நாட்களை நிர்ணயித்து குடிப்பவர்கள் பிரியர்கள் என எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில், நீண்ட நாட்களாக குடிக்காமல் இருப்பவர்கள் பண்டிகை காலங்களில் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை கணிசமானது. அதனால்தான் பண்டிகை நாட்களில் மது விற் பனையும் வருவாயும் அதிகரிக்கிறது'' என்கின்றனர். எனினும் தீபாவளிக்கு இவ்வளவு தொகைக்கு சரக்கு விற்பனையானது என்ற புள்ளிவிபரங்களால் தமிழ்நாட்டை குடிகார நாடு போல பார்க்கும் மனோபாவம் வளர்க்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களிடம் பேசியபோது, "கடந்த வருடம் 320 கோடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 602 கோடிக்கு விற்பனையானது. இந்த வருடம் 385 கோடிக்கு கணக்குப் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை 80 கோடி, சனிக்கிழமை 130 கோடி, ஞாயிற்றுக்கிழமை 175 கோடி என மது விற்பனையாகலாம் என யோசித்துள்ளனர் அதிகாரிகள். விற்கப்படும் மது பாட்டில்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. ஆனால், பாட்டில்களின் விலை அதிகரித்திருப்பதால் விற்பனை வருவாய் அதிகரிக்கிறது.

பொதுவாக, மது விலையை விட பாட்டிலுக்கு 5 முதல் 10 ரூபாய் கூடுதலாக நாங்கள் விற்பதால் பண்டிகை நாட்களில் வேகமாக இயங்குவோம். எத்தனை பாட்டில் விற்கப்படுகிறதோ அந்த அளவுக்கு எங்களுக்கும் வருவாய் இருக்கத்தானே செய்கிறது. ஆக, இலக்கு நிர்ணயித்தாலும் இல்லா விட்டாலும் பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரிப்பது இயல்பானதுதான்'' என்கிறார்கள் எதார்த்தமாக.


தமிழகத்தில் மதுக் கடைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் நீதிமன்றத்தில் சில உத்தரவுகளைப் பெற்று புதிய கடைகளும் திறக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த வகையில் 2021-க்குள் தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்கிற நம்பிக்கை எதிரொலித்தது. ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்ந்து நடத்தும் தற்போதைய எடப்பாடி அரசு, டாஸ்மாக் வருமானத்தை பெரிதாக நம்புவதால் மது விலக்கு என்பது சாத்தியமில்லை.

இது குறித்து நம்மிடம் மனம் திறந்த நிதித்துறை அதிகாரிகள், "தமிழக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியே 251 ரூபாயாக இருக்கும் என கணித்திருக்கிறோம். அந்த இலக்கை ஓரளவு நெருங்கியிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் இலக்கு நிர்ணயிக்கப்படும் வருவாயில் சராசரியாக 24 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் மூலமாகவே கிடைக்கிறது. 2014-15 நிதியாண்டில் 24 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய், கடந்த நிதியாண்டில் 31 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. ஒரு வகையில், அரசு கஜானாவின் நிதி ஆதாரத்திற்கு மது விற்பனையைத்தான் நம்பியுள்ளோம். டாஸ்மாக் வருவாயை மட்டும் பெரிதாக நம்பாமல் மாற்று வழிகளிலுள்ள வருவாயை பெருக்க அரசு திட்டமிட வேண்டும். நிதித்துறை மூலமாக சில யோசனைகள் அரசுக்கு தெரிவிக்கப் பட்டிருக்கின்றன'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.


தமிழகம் மற்றும் கேரளாவைப் போலவே ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசாங்கமே நடத்த துணிந்திருக்கிறது. கடந்த காலங்களில் மதுவிலக்கு அமலில் இருந்த ஆந்திராவில் அதனை ரத்து செய்தார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. தமிழகத்தைப் போலவே கடந்த சில வருடங்களாக மதுவுக்கு எதிரான போராட்டங்கள் ஆந்திராவில் வலிமை பெற்று வந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டி, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான மதுக்கொள்கை வரைவு திட்டத்தை கடந்த அக்டோபர் 2-ந்தேதி அறிவித்திருக்கிறார். இந்த புதிய கொள்கையின்படி, ஆந்திர பிரதேச டிரிங்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் மூலமாகவே மதுக்கடைகள் நடத்தப்படும் என அறிவித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, மதுக்கடைகளின் எண்ணிக்கையில் 20 சதவீதத்தை குறைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது இருந்த 4,380 மதுக்கடைகளை 3,500 ஆக குறைத்திருக்கிறது ஆந்திர அரசு. மேலும் தமிழகத்தைப் போலவே மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் மாற்றி அமைத்துள்ளார் ஜெகன்மோகன். அதன்படி, காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவித்துள்ளது ஆந்திர டிரிங்ஸ் கார்ப்பரேஷன். தவிர, அனைத்து கிராமங்களிலும் மதுக்கடைகளிலுள்ள பார்களை இழுத்து மூடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

புதிய மதுக்கொள்கையின்படி, மதுக்கடைகளை அரசே நடத்துவதால் எம்.ஆர்.பி. விலைக்கும் அதிகமாக விற்பது தடுக்கப்படும். சட்ட விரோத விற்பனையும் இருக்காது என ஆந்திர அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், இதே கருத்தைத்தான் 2003-ல் ஜெயலலிதா அரசும் சொல்லியது. ஆனால், அது சாத்தியப்படவில்லை. பாட்டிலிலுள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கும் அதிகமாக விற்கப்படும் போக்கு கடந்த 16 வருடங்களாக நீடித்தபடி இருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் சரக்குகளுக்கு கேரள அரசு போல பில் வழங்கும் முயற்சியை தமிழக டாஸ்மாக் உயரதிகாரிகள் எடுத்தபோதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை.

இந்தியாவிலேயே மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கேரளாவில் தான். வயது வித்தியாசமின்றி குடும்பத்தினர் இணைந்து மது குடிப்பதும், சிறிய வயதிலேயே மது அருந்துவதும் கேரளாவில் அதிகம். மது குடிப்பது ஒரு ஆரோக்கியமான கலாச்சாரமாக இருக்கும் கேரளாவில், 95 சதவீத மதுவிலக்கை அமல்படுத்தினார் முன்னாள் முதல்வர் காங்கிரஸ் உம்மன் சாண்டி. மது அடிமைகளின் இருப்பிடமாகவும் அடையாளமாகவும் கேரளா மாறிவிடக்கூடாது என்கிற அக்கறையில் இதனை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பையும் பாராட்டையும் சம அளவில் எதிர்கொண்டார் உம்மன் சாண்டி.

இந்த சூழலில், காங்கிரஸ் ஆட்சி யை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன், மது விலக்கு கொள்கையில் சில மாற்றங்களை எடுத்தார். அதன்படி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தவிர மாநிலத்தில் வேறு எங்கும் மது விற்பனை இல்லாமல் இருந்த நிலையில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமல்லாது இதர ஹோட்டல்களிலும் ஏர்போர்ட்டுகளிலும் மது விற்கப்படும்; மீண்டும் பார்கள் திறக்கப்படும் என அறிவித்த பினராய்விஜயன், மது விலக்கு என்பதைவிட மது தவிர்ப்புதான் அரசின் நோக்கம். அதனாலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிறார்.

மதுவிலக்கு கேரளாவில் சாத்தியமில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமிழகத்தைப் போல இலக்கு நிர்ணயிப்பதும், அதிக விலைக்கு விற்பதுமான போக்கு கேரளாவில் இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு அடுத்த இரண்டாண்டுகளில் அதனை கேரள அரசு திரும்பப் பெற்றதும் தமிழக ஆட்சியாளர்களை எப்பவும் குஷியாகவே வைத்திருக்கிறது. அதற்கேற்ப, தமிழகத்தில் வலிமையாக எதிரொலித்த மதுவிற்கு எதிரான போராட்டங்கள் சமீபகாலமாக வலுவிழந்து விட்டன என்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது.

 

 

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.