Skip to main content

பாராளுமன்றத் தேர்தலுக்கு பணப் பலனாக மாறும் பசுமை வழிச்சாலை!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
salam


சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க தீவிர பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையிலும் சாலை அமைக்க நிலங்களை அளவீடு செய்து கல் நடும் பணியில் போலீசாரை வைத்து மாநில அரசின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 
 

இந்த பசுமை வழிச்சாலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போடப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்க, இதனால் பயன்பெறுவது பாராளுமன்றத் தேர்தல்தான் என அதிமுக கொங்கு மண்டல மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் விரிவாகவே பேசினார். அவர் கூறிய தகவர்கள் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அவர் எடுத்த எடுப்பிலேயே, பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டுதான் வரப்போகிறது திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும், அடுத்த ஆண்டுதானே அப்போது பார்த்துக்கொள்ளலாம் என ஜனநாயகம் பேசி வருகிறார்கள்.

 

 

 

 

இந்த நிலையில் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் என்றாலும் இருக்கும் நாட்கள் வெறும் 300 நாட்கள். அதில் தேர்தல் நடைமுறைகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்படும். ஆக இருப்பது 240 நாட்கள்தான். மத்தியில் இருக்கும் பாஜக தமிழகத்தில் இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என விரிவான திட்டத்தில் உள்ளது. 
 

இதற்காக தனியார் ஏஜென்சிகளை களம் இறங்கி வேலை பார்த்து வருகிறது. அதன் அடிப்படையில்தான் பாஜகவும், அதிமுகவும் ரகசியமாக பேசி முடித்தது பாதிக்கு பாதி 50 - 50. இருவது தொகுதிகள் அதிமுக, இருவது தொகுதிகள் பாஜக என பேசி முடித்தது. எடப்பாடி அரசுக்கு பாராளுமன்றத் தேர்தல் வரை எந்த சிக்கலும் இல்லை என டெல்லி சர்க்கார் உறுதி கொடுத்துள்ளது. 
 

அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் இந்த எடப்பாடி அரசு நீடிக்க வேண்டும் என்றால் மத்தியில் பாஜக அரசுதான் இருக்க வேண்டும். அதற்கு கைமாறகத்தான் இந்த ஆளுக்கு பாதி என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் பசுமை வழிச்சாலைக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான் கேள்வி. எந்தவொரு அரசு திட்டமும், மத்திய அரசு திட்டமானாலும், மாநில அரசு திட்டமானாலும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறிப்பிட்ட சதவிகிதம் கமிசனாக ஆட்சியில் உள்ளவர்களுக்கு கிடைப்பது எழுதப்படாத நடைமுறை. 

 

 

 

 

இந்த பசுமை வழிச்சாலைக்கு முதல் கட்டமாக அரசு அறிவித்திருப்பது பத்தாயிரம் கோடி ரூபாய். இப்பணிகள் தற்போது நில அளவீடு மட்டுமே நடந்து வருகிறது. இது ஜூலை மாதத்திற்குள் முடிவடைந்து சாலை அமைப்பதற்கான நிறுவனத்தை உறுதி செய்யப்படும். அது வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், உள்நாட்டு நிறுவனமானாலும் சரி. 
 

சாலை அமைக்கும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்த நிறுவனம் முதல் தவணையாக 10 சதவீதம் ஆளும் அரசுக்கு வழங்கும். அதன்பிறகு சதவிகிதங்கள் கூடுவது உண்டு. ஆனால் இந்த பத்து சதவீதம்தான் பாராளுமன்றத் தேர்தலுக்கு இறைக்கப்படப்போகிறது. ஒரு தொகுதிக்கு 250 சி என்ற அளவில் 40 தொகுதிகளுக்கும் ஆயிரம் சி புழங்கப்போகிறது. 
 

பாஜக போட்டியிடும் தொகுதியானாலும் சரி, அதிமுக போட்டியிடும் தொகுதியானாலம் சரி ஓட்டுக்கு ரூபாய் 500 முதல் ஆயிரம் வரை திட்டமிடப்பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு தொகுதியில் மூன்றிலிருந்து நான்கு லட்சம் வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக நடைப்பெற்ற தேர்தல்களில் ஓட்டுககு பணம்தான் தீர்மானித்துள்ளது. 

 

 

 

 

இந்த நடைமுறையில் கடைசியாக நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் பாடம் சொல்லியுள்ளது என தனியார் ஏஜென்சிகள் எடுத்த ஆய்வு வெளிப்பட்டிருக்கிறது. ஆக நடைமுறைப்படியே தேர்தலை நடத்துங்கள். நமது இலக்கு 40க்கு 40 என்பதுதான் அதிமுகவும், டெல்லி சர்காரும் போட்டிருக்கும் சீக்கிரட் பிளான். இங்கு இதுவெல்லாம் தெரியாமல் சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகள் கால் ஊன்ற விடமாட்டோம் என பிரதான கட்சியான திமுக பொதுக்கூட்டம் போட்டு பேசி வருகிறது. நாட்கள் விரைவாக போய்க்கொண்டிருக்க அந்த வேகத்தோடு பாஜகவும், அதிமுகவும் தங்கள் உறவை வலுப்படுத்தி வருகிறது என்றார் அவர். இப்படி பசுமை வழிச்சாலை பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பணப்பலனாய் மாறியுள்ளது.