Skip to main content

கேரளாவைப் போல தமிழகத்தில் பெண்களை ஒருங்கிணைக்குமா திமுக?

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
vanitha2


இது சாதாரண சாதனை இல்லை. உலகமே வியந்து பார்க்கிற சாதனை. 620 கிலோ மீட்டர் தூரம், காசர் கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில் அணிவகுத்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் பேர். இதில் பல இடங்களில் இரட்டை வரிசையாக வேறு நின்றிருக்கிறார்கள். 
 

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்று கருதப்படும் இந்த நிகழ்வு, சபரிமலையில் பெண்களின் வழிபாட்டு உரிமைகளை ஆதரித்து நடைபெற்றுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை கேரளா அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால், பாஜகவும், காங்கிரஸில் ஒரு பிரிவினரும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 

ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக பக்தர்களை திசைதிருப்பும் நோக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் பெண்களுக்கே இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை என்றும், அரசின் நடவடிக்கைக்கு பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
 

ஆனால், சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சபரிமலையைச் சுற்றியுள்ள இரண்டு வார்டுகளில் பாஜக 7 வாக்குகளும், 12 வாக்குகளும்பெற்று படுதோல்வியைச் சந்தித்தது.
 

இந்நிலையில்தான், கேரளா கம்யூனிஸ்ட் கட்சி தனது நடவடிக்கைக்கு பெண்களின் ஆதரவு இருப்பதை பறைசாட்டும் வகையில் பெண்கள் மதில் என்ற போராட்ட உத்தியைக் கையில் எடுத்தது. ஏற்கெனவே 25 ஆண்டுகளுக்கு முன் காசர்கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆண்களும் பெண்களும் கலந்த மனிதச் சங்கிலியை கேரளா கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியிருந்தது.
 

ஆனால், இப்போது பெண்கள் மட்டுமே பங்கேற்ற மனித சுவரை எழுப்பி சாதனை படைத்திருக்கிறது. பெண்கள் வரிசைக்கு எதிர்புறம் ஆண்களும் வரிசையில் நின்றனர். போராட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாஜக அறிவித்திருந்தது. அதைச் சமாளிக்கவே ஆண்கள் வரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
 

பெண்களை இதுபோன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தனித்து பயன்படுத்துவது இந்தியா முழுமைக்கும் நல்ல பயன்தரும் என்ற கருத்து இப்போது உருவாகி இருக்கிறது. கேரளாவைப் போல எல்லா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் பெண்களை இப்படி அரசியல்ரீதியாக கற்பிப்பது நல்ல பயனளிக்கும் என்ற எண்ணம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
 

vanitha-3


தமிழகத்தில் திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் பெண்களை இதுபோல அணிசேர்த்து அரசியலை கற்பிக்க முடியும் என்று கூறுகிறார்கள். சமீப காலத்தில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாதர் அமைப்புகளைத் தவிர்த்து, திமுக மகளிரணி அரசியல் விழிப்புணர்வு பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
 

அதிமுகவில் மகளிர் அமைப்பில் ஏராளமான உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அது அமைப்பு ரீதியாக இல்லை. அதேசமயம், திமுக மகளிரணி அமைப்பு ரீதியாக கட்சிக்கு கட்டுப்பட்ட அமைப்பாக உருவாகி இருக்கிறது. கற்றறிந்த மகளிர் ஏராளமாக திமுக மகளிர் அமைப்பில் இணைந்திருக்கிறார்கள்.
 

ஆனால், மகளிரணி தலைவரான கனிமொழிக்கும் சரி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்களுக்கும் சரி உறுப்பினர்களைச் சேர்க்கக்கூட அனுமதி இல்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள், கிளைக்கழக திமுக செயலாளரின் அனுமதி இல்லாமல் பெண்களைக்கூட உறுப்பினராக இணைக்க முடியாது.
 

மகளிரணி தலைமைக்கு கட்டுப்பட்டதுதான். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போல, இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்ற தனி அமைப்பாகக்கூட இல்லாமல், தனித்து உறுப்பினர்களை சேர்த்து, தலைமைக் கழக அனுமதியோடு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டங்களை நடத்தவேனும் அனுமதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்றங்களில் 33 சதவீத ஒதுக்கீடு என முழக்கம் தொடர்கிறது. அப்படி அதுவும் கிடைத்துவிட்டால், பெண்களுக்கு அரசியல் கல்வி மிகவும் அவசியம். பெண்களின் பெயரால் ஆண்களே அதிகாரம் செலுத்தும் அரசியலைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால், கேரளாவைப் போல பெண்களை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.
 

திமுக மகளிரணி தரப்பில் இந்த போராட்டம் கவனத்தை ஈர்த்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமை இதுகுறித்து என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.