Skip to main content

"இதை செய்யுங்கள், இல்லையெனில் தள்ளி நில்லுங்கள்!" - காவிரி பிரச்சனைக்கு கமல் சொன்ன புதிய தீர்வு!  

Published on 05/04/2018 | Edited on 05/04/2018

மக்கள் நீதி மய்யம், கட்சி தொடங்கப்பட்ட பின் நடக்கும் முதல் பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று மாலை ஏழு மணி அளவில் தொடங்கி நடந்தது. இந்தக் கூட்டத்தில் காவிரி பிரச்சனைக்காக தீர்வுகள் சொல்லப்படும் என்று மதியமே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கமல் தெரிவித்திருந்தார். மேடையில் காவிரி தீர்வுகளை பற்றி பேச ஆரம்பித்த கமல் கூறியது... 

Kamal at trichy manadu


"எங்கள் மாண்புமிகு மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லிக்கொள்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அமைக்கவில்லை என்றால் தமிழகம் அமைதியான முறையில் உங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கும். இது எங்கே வரை செல்லும் என்று யோசித்து பாருங்கள், நீங்கள் எல்லோரும் அறிஞர்கள் தான், அறிவுள்ளவர்கள் தான். கோபத்தின் உச்சம் அஹிம்சை என்ற காந்தியின் அஹிம்சைதான் என்னுடைய கொள்கை. மற்றவர்களைப் போன்று தொடை தட்டுப்பவன் அல்ல, அமைதியாக, அழுத்தமாக நின்று எதிர்ப்பவன். 

காவிரியில் நமக்கு கிடைக்கவேண்டிய பங்கு, நமது உரிமை. அதை விட்டுக்கொடுக்க முடியாது. அதே நேரம், பல வருடங்களாக நியாயம் கிடைக்காமலே போனால், எங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் என்னாவது? அதனால், இருக்கின்ற நீர்வளத்தை வைத்துக்கொண்டு செய்ய வேண்டியதையும் யோசிக்க வேண்டிய முக்கியமான நேரம் இது. இதற்கான தீர்வை பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம். தமிழக அரசுக்கும் இந்தத் தீர்வு தெரியாமலில்லை. ஆனால், அவர்கள் இந்தத் தீர்வுக்காக ஒரு அடிகூட எடுத்துவைக்க இல்லை என்பது எங்களுடைய கருத்து. இது தாழ்மையான கருத்து அல்ல, அழுத்தமான கருத்து. இந்த நீர் பேரத்தினால் தமிழர்களை எவ்வளவு கெஞ்ச வைக்க முடியுமோ அவ்வளவு கெஞ்ச வைத்துவிட்டனர். அதற்கு காரணம், மத்திய அரசின் முதுகுக்கு பின்னே இருக்கும் தமிழக அரசு தான்.

இதற்கான நிவாரணத்தை பல சட்ட அறிஞர்களும் நீர்நிலை ஆராய்ச்சியாளர்களும் சொல்லியிருக்கின்றனர். சாதாரண பாமர மக்களுக்கு, பாதசாரிகளுக்கும் கூட தோணுகிறது, 'இதை ஏன் இவர்கள் செய்யவில்லை என்று?'. இப்போதும் நான் கேட்கிறேன், ஏன் செய்யவில்லை? செய்யுங்கள், இல்லையெனில் தள்ளி நில்லுங்கள். செய்ய எங்களிடம் ஆள் இருக்கிறது" என்று மக்களை கைகாட்டுகிறார். 

"நாங்கள் ஆய்வாளர்களிடம் பேசினோம், அறிஞர்களிடம் பேசினோம் என்று சொல்கிறோம். இவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்ற எண்ணம் உங்களுக்கும் இருக்கலாம். இது நேற்று நடந்த உண்ணாவிரதம் போலல்ல, நிஜமாகவே நடந்த ஒன்று" 
என்று தமிழகத்தை ஆளும் கட்சி நடத்திய உண்ணாவிரதத்தைப் பற்றி கலாய்த்துவிட்டு பின்னர் அவர் காவிரி பிரச்சனைக்காக வல்லுனர்களிடம் பேசிய வீடியோ தொகுப்பினை அந்த மேடையில் மக்களுக்கு போட்டுக் காட்டினார். அந்த வீடியோவில் பேசப்பட்டது என்ன என்று பார்ப்போம்.

Professor Janakiraman


கமல் : காவிரி நதிநீர் பங்கீட்டைப் பற்றிய உங்களின் கருத்து ?

பேராசிரியர் எஸ் ஜானகிராமன் : காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒரு அமைப்பை உச்சநீதி மன்றம் அமைக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அதுவும் மிகவும் அவசியமான ஒன்று. 

கமல் : காவிரி டெல்டா மாவட்டங்களில், காவிரி நீரை விட நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது அதைப்பற்றிய உங்கள் கருத்து ? 

பேராசிரியர் எஸ் ஜானகிராமன் : ஆற்றில் மணல் இருக்கும் வரை நிலத்தடி நீருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, மணலை அள்ள அள்ள மணலை எடுப்பது மட்டுமல்லாமல், நிலத்தடி நீரையும் எடுக்கின்றோம். கடந்த பத்து வருடங்களில் உப்புத் தண்ணீர் அதிகரித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்க்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

கமல் : சுற்றுசூழல் மாறுதல்கள், காலநிலை மாற்றங்கள் இவை எல்லாம் டெல்டா விவசாயிகளை பாதிக்குமா ?  

பேராசிரியர் எஸ் ஜானகிராமன் : உலகத்தில் இருக்கும் அனைத்து டெல்டாவுமே கடலை ஒட்டியிருப்பது. மேலிருந்து ஆறில் வரும் வண்டல் மண் தான், கடல் பரப்பில் இருந்து உயர்த்தி காட்டுகிறது. வடகிழக்கு பருவமழையின் போது தான் ஆற்றில் நீர் ஓடுகிறது மற்ற ஏழு அல்லது எட்டு மாதங்களில் வரண்டுதான் இருக்கிறது. அதுதான் உண்மை. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பேக்வாட்டர் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை உள்ளே வந்துள்ளது. பிச்சாவரம் முதல் வேதாரண்யம் வரை 60 இடங்களுக்கு மேல் கடல் அரிப்புகள் அதிகம் நடந்துள்ளது. 1971 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இருபது சதவீத டெல்டா நிலத்தை இழந்திருக்கிறோம். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் பார்த்தீர்கள் என்றால் ஆற்றில் கருப்பாக நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் காவிரியில் நீர் இல்லை.

கமல் : காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

பேராசிரியர் ஜானகிராமன் : இங்குதான் அரசு தீவிர கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால், இன்றிருக்கும் அரசுக்கு இதை பற்றிய  கவலை இருக்கிறதா ? நான் வைத்திருக்கும் புள்ளியியல் போன்று ஏதேனும் வைத்திருக்கிறார்களா ? டெல்டாவை பாதுகாக்க வேண்டும், டெல்டாவின் தண்ணீர் வரத்தை உறுதி செய்ய வேண்டும். டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், கடல்நீர் உள்ளே வரவிடாமல் தடுக்க வேண்டும். காவிரி பிரிவினையை எவ்வளவு துல்லியமாக கையாள்கிறமோ அதேபோன்று தமிழகத்துக்குள் இருக்கும் பிரச்சனையையும் கையாள வேண்டியிருக்கிறது. இது அனைத்தையும் தீர்க்க வேண்டும், இல்லையெனில் டெல்டா காணாமல் போய்விடும்.   

கமல் : காவிரி நதிநீர் பிரச்சனையை தமிழகத்தின் மொத்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டுமா ? ஏன் ?

பேராசிரியர் ஜானகிராமன் : கண்டிப்பாக. தமிழ்நாட்டில் அறுபது சதவீதம் நிலம் காவிரி படுகையில் தான் இருக்கிறது. காவிரிபொய்த்துவிட்டால், தமிழ்நாட்டின் பொருளாதாரமும் கண்டிப்பாக பொய்த்துவிடும். அதில் எந்த ஐயமும் இல்லை. 

இந்த வீடியோ முடிந்ததும் பேசிய கமல்,  "இது நாங்கள் பேசியதில் ஒரு பகுதிதான். இன்னும் நிறைய அறிஞர்களுடன் பேசியிருக்கிறோம். இதற்கு மாற்றுக்கருத்துகளும், வேறு தீர்வுகளும் கூட இருக்கிறது. இதை மையத்தில் இருந்து பார்த்து எது விவசாயத்துக்கு வேண்டியது என்று யோசிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல எதிர்காலத்தை நோக்கியும் யோசிக்க வேண்டி உள்ளது. செழிப்பான எதிர்காலத்தை பற்றியும் யோசித்து செயல்படும் மக்கள் நீதி மய்யம்" என்றார். 

தற்போது சொல்லப்பட்ட தீர்வுக்கு சற்றே மாறுபட்ட கருத்தைக் கொண்ட உரையை கமல் போட்டுக்காட்டினார். அதில் பொதுப்பணித்துறையில் பணி புரிந்து ஓய்வில் இருக்கும் வீரப்பன் என்ற பொறியாளர் பேசினார். அவர் பேசியது...   

Engineer Veerappan

 
"காவிரி நீர் பங்கீடு சம்மந்தமாக, காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக்  குழுவும் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். குறிப்பிட்ட நாளில் அது வராமல் போனதால் தற்போது கொதித்து இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது  எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை போராடிப் பெறவேண்டும். அதே நேரத்தில் தங்களை தயார்படுத்திக்  கொள்ளவும்  வேண்டும். மழை என்பது கர்நாடகா மற்றும் ஆந்திராவை ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழகத்தில் சுமார் 979 மிமீ மழை பெய்கிறது. இது மற்ற மாநிலங்களை விட அதிகமானது. எல்லோர் கண்ணோட்டத்திலும் தமிழ்நாடு என்ற மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாக பார்க்கப்படுகிறது. 

இந்த காவிரி நீரில் வரும் பல டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அப்படி கலக்கவிடாமல் ஏரி, குளங்களிலும், அணைகளிலும் தடுப்பு அணைகளையும் கட்டி அந்த நீரை சேமிக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் தண்ணீர் சூழ் தமிழகமாக மாறும் என்று நான் நம்புகிறேன். கல்லணை கால்வாய்களில் நிறைய வாய்க்கால்கள் பெரிது பெரிதாக இருக்கின்றன. அந்த வாய்க்கால்களை கான்க்ரீட் கொண்டு அமைத்தால் ஓட்டம் வேகமடைந்து இரண்டு நாட்களில் நாகப்பட்டினம் சென்று தடுப்பு அணையில் சேர்ந்துவிடும். வயல்களில் இருக்கும் லட்சக்கணக்கான வாய்க்கால்களுக்கு பதிலாக பிவிசி பைப்களை கொண்டு சொட்டு நீர் பாசனம் அல்லது தெளிப்புநீர் பாசனம் செய்தால். ஐம்பது முதல் இருபத்தி ஐந்து சதவீதம் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கலாம். 

ஒருங்கிணைந்த ஆந்திராவில் கடந்த 2003 ஆண்டில் இருந்து 2013 வரை 'ஜலஎங்னம்' என்று ஒரு திட்டத்தை ஒரு லட்சத்தி எண்பத்தைந்தாயிரம் கோடி செலவு செய்து  பாசன மேம்பாட்டு திட்டத்திற்காக கொண்டுவந்தனர். அதேபோல கர்நாடக அரசு 1980ஆம்  ஆண்டிலிருந்து தற்போது வரை பாசனத்திற்காக ஐம்பதினாயிரம் கோடி வரை செலவு செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இருபத்திஐந்து வருடங்களில் பாசனத்திற்காகவும், பாசன மேம்பாட்டிற்காகவும் இவர்கள் செய்த செலவு வெறும் 6000 கோடி மட்டுமே. தமிழ்நாட்டின் சாபக்கேடு காவிரி நீர் என்பது தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் விவசாயிகளுக்கு மட்டும் உள்ள பிரச்சனை போல பார்க்கப்படுவதுதான். உண்மையில் காவிரி என்பது தமிழகத்தின் உயிர்நாடி. மொத்தத்தில், காவிரி பிரச்சனை தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனை" என்று காவிரி பிரச்சனையில் இவரது தீர்வை  சொன்னார்.

இந்த வீடியோ முடிந்த பின்னர் பேசிய கமல், "என்ன வயலும் வாழ்வும் போன்று போய் கொண்டிருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். இதுவும் மிக முக்கியமான விஷயம். காவிரி பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று இவர்கள்  பேசியதைப்  பார்த்தால் தமிழக அரசாங்கம்  இதுவரை காவிரிக்கு, விவசாய பாசனத்துக்கு செலவே செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது. காவிரி நம் உரிமை, அதை வாங்கியே தீர வேண்டும். அதே போன்று பிற மாநிலங்களுடனான நீர் பிரச்சனையையும் சட்டரீதியாக வாங்க வேண்டும். அது நம் கடமை" என்று கூறினார்.