
சட்டப்பேரவை நிகழ்வில் வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் பட்டப் பகலில் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசனுடைய கவனத்திற்கு கொண்டுசெல்ல எங்கள் இயக்கத்தினுடைய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்தார்.
ஆனால் எடுத்து கொள்ள மறுத்து விட்டனர். மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதில் தமிழ்நாடு ஒரு மாநிலம் .தமிழ்நாட்டில் இருக்கின்ற காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட காவல்துறை. ஆனால் இன்று கைகட்டி மௌனம் சாதித்து ஏவல் துறையாக செயல்படுவது தான் மிக கேவலமாக இருக்கிறது. எல்லா மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பான தகவல் செய்தியாக போகிறது. ஒரு பிரபலமான யுடியூபருக்கு இப்படிப்பட்ட நிலைமை என்றால் தமிழகத்தில் எங்கு சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது.
முதல்வர் சொல்கிறார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றும் தான் இருக்கிறது. வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் இதை பெரிது படுத்துகிறார்கள் என்கிறார். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு போடாமல் அன்றைய தினமே அவர்கள் ஜாமீனில் வருகிறார்கள். ஜனநாயக நாட்டில் ஜனநாயகப்படி ஒவ்வொரு மனிதனுக்கு பாதுகாப்பு வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி குற்றத்திற்கு துணை போகக்கூடாது. தமிழக மக்கள் எப்படி ஜனநாயக இல்லாத நாட்டில் வாழ முடியும். எவ்வளவு கொடுமையான செயல். மலத்தைக் கொண்டு சென்று உங்கள் வீட்டில் கொட்டினால் ஏற்றுக் கொள்வார்களா? திமுக அவை முன்னவர் சொல்கிறார் 'இதுவெல்லாம் பெருசா' என சொல்கிறார். திமுகவினருக்கு இது பெரிதாக தெரியாது. நாட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தால் தானே நாட்டு மக்களின் பிரச்சனைகள் என்னவென்று தெரியும். நாங்கள் இவர், அவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கவில்லை. எந்த ஒரு மனிதருக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு'' என்றார்.