Skip to main content

ஆர்.எஸ்.எஸ். அரங்கேற்றும் புதிய நாடகம்!

Published on 09/06/2018 | Edited on 09/06/2018

தேர்தல் நெருங்குகிற சமயத்தில் எல்லாம் பாஜகவும் காவிச் சங்கங்களும் புதிய தந்திரத்தை கடைப்பிடிப்பார்கள். 2019 ஆம் ஆண்டு மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதோ ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது புதிய நாடகத்தை அறங்கேற்றியுள்ளது.

 

pranab at rss



இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும். எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும். சமஸ்கிருத மொழிக்கு முடி சூட்ட வேண்டும். சாதி அமைப்புகளை உத்தரவாதப்படுத்தும் மனுசாஸ்திரத்தை அமல்படுத்தபடுத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்சின் திட்டம்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தவே அரசியல் அமைப்பாக பாஜகவையும் அதன் துணை அமைப்புகளாக பல்வேறு காவி அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் உருவாக்கி உலவவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு குரலில் பேசுவார்கள். கலகம் செய்வார்கள். கட்டிப்பிடிப்பார்கள். ஆனால், அவர்கள் அனைவரின் இலக்கும் ஒரே இடத்தை நோக்கியே இருக்கும்.

கடந்த தேர்தலுக்கு முன் மோடியை மோல்டு செய்து மூத்த தலைவர்கள் பலரை பின்னுக்கு தள்ளியது ஒரு தந்திரம். அதாவது, அவர்களுக்கு எதிரான விஷயம் மக்கள் மத்தியில் பிரச்சாரத்துக்கு பயன்பட்டுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ்சின் திட்டம்.

ஆனால், இப்போது பாஜகவுக்கு ஆதரவான கட்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக கழன்றுகொண்டிருக்கும் நிலையில், இடைத்தேர்தல்கள் அனைத்திலும் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது பாஜக. மோடியைச் சுற்றி உருவாக்கிய பிம்பம் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் ஒரே இந்தியா, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே சட்டம் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்பதை ஆர்எஸ்எஸ் உணர்ந்துவிட்டது.

 

 


எனவே, இப்போது புதிய வேடத்தை போட வேண்டியிருக்கிறது. அதற்கான முயற்சிதான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை, ஆர்எஸ்எஸ் விழாவுக்கு அழைத்தது என்கிறார்கள்.

பிரணாப்புக்கு அழைப்பு விடுத்ததும் நாடு முழுவதும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. அதை பிரணாப் ஏற்றது மதசார்பற்றோர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்ற பிரணாப் இந்தியாவின் பலமே சகிப்புத்தன்மைதான். நாட்டின் பன்முகத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாட வேண்டும். சகிப்புத்தன்மை இல்லாமல் போனால் நமது நாட்டின் அடையாளத்தை அழித்துவிடும் என்று பொட்டில் அறைந்தது போல பேசினார் பிரணாப்.

பிரணாப் அப்படித்தான் பேசமுடியும். ஆனால், பிரணாப் ஆர்எஸ்எஸ் மேடையில் பேசியதை அந்த அமைப்பு தனது முகத்துக்கு புதிய அரிதாரம் பூசப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

மாற்றுக் கருத்துக்களுக்கும் ஆர்எஸ்எஸ் மதிப்பளிக்கும் என்பதை வெளிப்படுத்த இந்த மேடையை பயன்படுத்திக் கொள்ளும். இந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத், ஆர்எஸ்எஸ் தனது நிலைப்பாட்டில் மாறாது என்பதை தெளிவுபடுத்தினார்.

  pranab photoshop



ஆனால், இந்த விழாவில் பேசிய பிரணாப் ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவிய ஹெட்கேவரை பாரதத்தாயின் தவப்புதல்வர் என்று சொல்லியிருக்கிறார். அதுதான் சங்கடமாக இருக்கிறது. பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்த, நாட்டு மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த ஒரு அமைப்பின் தலைவரை பாரதத்தாயின் தவப்புதல்வர் என்றால் மதசார்பின்மையை ஆதரிப்போருக்கு சங்கடமாகத்தானே இருக்கும்?

இது ஒரு பக்கம் இருந்தாலும், விழா முடிந்த சில நிமிடங்களிலேயே ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டத்தினர் தங்களுடைய போட்டோஷாப் வேலையை தொடங்கிவிட்டார்கள். ஆம், ஆர்எஸ்எஸ் மேடையில் பிரணாப் முகர்ஜி தலையில் தொப்பியுடன் மார்பில் கைவைத்து உறுதிமொழி எடுப்பதுபோன்ற படத்தை வெளியிட்டனர். இந்தப் படத்தை பார்த்ததும் பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா கொந்தளித்துவிட்டார். தாங்கள் பயந்ததுபோலவே நடந்துவிட்டதாகவும், இதற்காகத்தான் அந்த விழாவுக்கு போகவேண்டாம் என்று கூறியதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

 

 


போட்டோஷாப் வேலையை மட்டுமல்ல, இனிவரும் தேர்தல்களில் அனுதாபம் தேடுவதற்கான வேலைகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது. மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி உண்மையானால் அனைவரும் இணைந்து கண்டிக்க வேண்டும்தான். ஆனால், மோடியின் செல்வாக்கு குறைந்துவரும் நிலையில், அவரைக் கொலை செய்யும் அளவுக்கு மாவோயிஸ்ட்டுகள் முட்டாள்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லையே. அதுமட்டுமின்றி ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர் ஆட்சியைப் பிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற கடந்தகால உண்மையும் கண்முன்னே வந்து போகிறது. மோடியின் உயிரைப் பறித்தால் அந்த அனுதாபம் யாருக்கு சாதகமாக அமையும் என்பதை மாவோயிஸ்ட்டுகள் அறியாதவர்கள் அல்ல. எனவே, இந்தப் பிரச்சாரமே ஒரு சதிதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.