
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர் துரைசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனது வீட்டின் மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றக் கோரி விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இணைப்பினை மாறுதல் செய்ய ஒரு லட்ச ரூபாய் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சரவணன் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்து இணைப்பை மாற்றும் படி கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை கொடுத்தால் மட்டுமே இணைப்பை மாற்றம் முடியும் என்று அதிகாரிகள் கறாராக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பணத்தை இன்றே தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விரக்தியடைந்த சரவணன், இதுகுறித்து ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவப்பட்ட ரூ. 25 ஆயிரம் மின் வாரிய அதிகாரிகளிடம் சரவணன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற்பொறியாளர் புனிதா, போர்மென் புல்கிஸ் பேகம், வணிக ஆய்வாளர் மோனிகா ஆகிய மூன்று பேரையும் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் மூன்று பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பது அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.