கோடியக்கரை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஓர் முக்கிய சுற்றுலாத் தளம். சுற்றுலாத் தளம் என்பதை விட இயற்கையின் கொடை. அதானால் தான் அங்கு பறவைகள் சரணாலயமும், விலங்குகள் சரணாலயமும் ஒருங்கே அமைந்திருந்தன.
ஆமாம், அமைந்திருந்தன. இப்போது இல்லை.
சதுப்பு நிலக்காடுகள் கொண்ட பகுதி. மரங்கள் நிறைந்து பசுமையாக திகழ்ந்தப் பகுதி. ஆமாம், திகழ்ந்தப் பகுதி. இப்போது நிலைமை தலைகீழ் சூழல். மரங்கள் எல்லாம் 'கஜா' புயலால் வேரோடி பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன. பசுமை பறிப் போயிருக்கிறது. சாய்ந்த மரங்கள் காய்ந்து போய் கிடக்கின்றன. விளைவு, இது வரை, அந்த மரங்களில் உலா வந்த குரங்குகள் சாலையோரத்தில் பாவமாய் அமர்ந்திருந்தன.
புயலுக்கு அடுத்த நாளே மான்கள் இறந்து கிடந்த படங்கள் நாளிதழ்களில் வந்தன. பிறகான நாட்களில் மான்கள் உள்ளிட்ட பல விலங்குகளின் உடல்கள் காரைக்கால் பகுதியில் கடலால் கரை ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கஜா புயலால் பெரும் இயற்கை சீரழிவு இது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பொரு முறை கோடியக்கரை சென்றிருந்த போது, கண்டக் காட்சிகள் தான் மீண்டும் மனதில் நிழலாடியது. பெரும் மான்கள் கூட்டம். நாங்கள் சென்ற வாகன ஓசை கேட்டு துள்ளி ஓட ஆரம்பித்தன. ஒன்றன் பின் ஒன்றாக ஓட்டப்பந்தயம் ஓடுவது போல் இருந்தது. தொலைக்காட்சிகளில் காணும் காட்சியை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது.
இனி அப்படியொருக் காட்சியை காண பல ஆண்டுகள் ஆகும் என்றார் உள்ளுர்வாசி ஒருவர். இயற்கை மீண்டும் தழைத்து, மிச்சம் இருக்கிற உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்து அப்பகுதி, பழைய நிலைக்கு திரும்ப பல்லாண்டுகளாகும். பறவைகள் சரணாலயமும், விலங்குகள் சரணாலயமும் மீண்டும் பழைய படிக்கு உருப்பெற்றால் தான் கோடியக்கரையின் அடையாளம் மீண்டும் கிடைக்கும். இன்னொரு புறம் இயற்கை சமநிலைக்கு அது அவசியமும் கூட.
மனிதர்களுக்கான இழப்பு எப்படியோ, அப்படியே இயறகையின் இழப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் அரசு கோடியக்கரையின் இயற்கையை மீட்டுருவாக்கம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மனிதர்களின் இழப்பை ஈடு செய்யவே அரசு இன்னும் களம் இறங்காத போது, இயற்கையை எங்கே திரும்பிப் பார்க்கப் போகிறது ?
இயற்கை என்பது இங்கு மட்டும் பறிபோகவில்லை. ஒவ்வொரு ஊரிலும் இழப்புகள் தான். தென்னை மரங்கள் இழப்பை போலவே ஊரில் இருந்த எல்லா மரங்களும் சாய்ந்து போயிருக்கின்றன. இது பெரும் சுற்று சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
கோடியக்கரையில் இருந்து கிளம்பினோம். கோடியக்கரையில், ஆங்காங்கே கூட்டமாக மக்கள் திரண்டிருந்தார்கள். ஏதோ கலவரப் பகுதி போல் தோற்றமளித்தது. அது குறித்து பின்னர் காண்போம்.
கோடியக்கரையில் இருந்து வேதாரண்யம் திரும்பினோம். நகரமே இருண்டு கிடந்தது. பல வீடுகளில் மெழுகுவர்த்திகள் தான் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சில வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகள். ஒரு சில வீடுகளில் சோலார் விளக்குகள். ஒன்றிரண்டு வீடுகளில் மாத்திரம் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த வீடுகளில் ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருந்தன. டீசலில் இயங்கும் சிறு ஜெனரேட்டர்கள்.
மேலே கண்டது புயல் அடித்த பதினைந்தாம் நாள் நாங்கள் கண்ட காட்சி. இரவு பதினோரு மணிக்கு மேல், முக்கிய நகரப் பகுதியில் மாத்திரம் மின்சாரம் வழங்கப்பட்டது என்றார்கள். அது காலை 5 மணிக்கு நிறுத்தப்படும், காரணம் எல்லா இடத்திலும் சீரமைப்பு பணிகள் நடந்ததால், விபத்து நிகழ்ந்து விடாமல் தவிர்க்க.
வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டிணம் கிளம்பினோம். கடற்கரையை ஒட்டியப் பகுதி, புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புஷ்பவனம் உள்ளிட்ட ஊர்கள். அந்த சாலையில் ஆங்காங்கே வெளிச்சம். அவை பெட்ரோல் பங்க்குகள். மீதி எல்லா இடங்களிலும் கும்மிருட்டு. நாங்கள் சென்ற காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் கண்ட காட்சி தான் கொடுமை.
முக்கியச் சாலையில் இருந்து உள்ளடங்கி இருக்கும் கிராமத்து மக்கள், சாலைக்கு வந்து ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். பெண்கள் காரை நிறுத்த சொல்லி கை அசைத்தார்கள், உதவிப் பொருட்கள் வந்த வாகனம் என நினைத்து. சில இடங்களில் டாடா ஏஸ்களை நிறுத்தி உதவிப் பொருட்கள் விநியோகமும் நடந்து கொண்டிருந்தது.
சில இடங்களில் குழந்தைகள் கையேந்தியது தான் கொடூரமானக் காட்சி.
அத்தியாவசியத் தேவைகளை அரசு வழங்கி இருந்தால், இந்த அவலக் காட்சிகள் அரங்கேறி இருக்காது.
புயல் அடித்த 25வது நாளும் இன்னும் அரசு உதவவில்லை என்று மக்கள் சாலை மறியல் செய்யும் காட்சி தினம் தொலைக்காட்சிகளில், பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருப்பது தான் இந்த அரசிற்கு கிடைத்திருக்கும் நற்சான்று!
போர் நடக்கும் நாடுகளில் மக்கள் படும் அவதியை பத்திரிக்கைகள் வாயிலாகப் படித்ததை அங்கே கண் கூடாக கண்டோம்.
(தொடரும்...)