அர்த்தமில்லா ஒரு பட்டப்பெயர், இவ்வுலகிற்கு பட்டமானது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும். எடிசன் கண்டுபிடித்த மின்சாரம், தான் பிறந்தபோது தன் இல்லத்திற்கு வந்ததால், எட்சன் என பெயர் பெற்றபோது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை; தன் வாழ்வு பின்நாட்களில் உலகையே பிரகாசமடையச்செய்யும் என்று. தான் நேசித்த மண்ணில், தான் நேசித்த ஆட்டத்தை ஆட தந்தையின் ஆதரவு மட்டுமே அவருக்கு இருந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல, தனது காலில் அகப்பட்டதையெல்லாம் உதைக்கத் தொடங்கியபோது, தன் மாயாஜாலக் கால்களால் தனது தலையெழுத்தை மாற்றவேண்டும் என்று இலக்கு நிர்ணியக்கப்பட்டது.
இன்னல்களைத் தாண்டி இலக்கு தெரிந்ததால் என்னவோ, பீலேவால் தன் எதிரணியினரைத்தாண்டி கோல் போஸ்டை எளிதாக காணமுடிந்தது. இன்று நாம் கொண்டாடும் எம்பாப்பேவை விட பலமடங்கு பீலேவை கொண்டாடியது இவ்வுலகம். தொழில்நுட்பம், சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில், பீலே என்னும் காந்தம், தான் கால் வைத்த களத்தையெல்லாம் ஈர்த்து தனதாக்கிக்கொண்டது. தன்னுடைய 16ஆவது வயதில் தனது தாய்நாடான பிரேசில் தேசிய கால்பந்து அணியில் களமாடியபோது, கால்பந்து உலகம் தன்னுடைய மன்னனை சந்தித்தது.
பீலேவின் ஒவ்வொரு கோலும் கால்பந்தை மேலும் அழகாக்கியது. தன்னுடைய தாய்நாட்டின் மேல் வெளிச்சம் பாய்ச்சியது மட்டுமின்றி, வறுமையில் ஓடிய பல கால்களையும் வெற்றியை நோக்கி ஓடவைத்தது. மெஸ்ஸி, ரொனால்டோவிலிருந்து, எம்பாப்பே வரை இதில் அடக்கம். வறுமையில் பிறந்து தங்களது வாழ்விற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் பீலே ஒரு ஆதர்ச நாயகன். இருண்ட வானில் அனைவரும் காணும் ஒரு பிரகாச நட்சத்திரம் போல...
அது என்ன பீலே (Pele)? தன் பள்ளிக்காலத்தில், தன்னுடைய நண்பர்களால் கிடைத்த பீலே என்னும் பட்டபெயருக்கு அர்த்தம் ஏதும் இல்லை. ஆகையால், தன்னுடைய வாழ்க்கை மூலம் அதற்கு அர்த்தம் கொடுக்கத் தொடங்கினார் பீலே. அவருக்கு அந்தப் பட்டப்பெயர் ஏனோ பிடிக்கவில்லை. ஆனால், அதை மாற்றவும் அவர் விரும்பவில்லை. நாளடைவில், உலக கால்பந்து ரசிகர்களின் தீவிர உச்சரிப்பினால் பீலே எனும் பெயர் கால்பந்து மந்தரமாகிப்போனபோது.
தனது 16ஆவது வயதில் தேசிய அணிக்கு விளையாட ஆரம்பித்த பீலே, தனது 29ஆவது வயதில் தனது 1000மாவது கோலை அடித்து புதிய வரலாறு படைத்தார். ஆயிரம் கோல்களை அடிக்க, பத்தாயிரம் தடைகளை தாண்டவேண்டியிருந்தது. அவற்றை தன் இன்முகச் சிரிப்பாலும், பன்முக ஆட்டத்தாலும் சோர்வில்லாமல் தாண்டினார். சர்வதேச கால்பந்து போட்டியில் சிறு வயதில் முதல் கோலடித்த வீரர் என்ற பெயருடன் சேர்ந்து, பிரேசில் நாட்டின் தேசிய சொத்தாகிப்போனார் பீலே. பல சர்வதேச கால்பந்து அணிகள் அவரை இழுக்க முண்டியடித்தபோது, பீலேவை தனது நாட்டின் ‘தேசிய பொக்கிஷம்’ என அறிவித்து, அந்த முடிசூடா மன்னனை தன்னகத்தே வைத்துக்கொண்டது பிரேசில் அரசு. ஆனால், சூரியன் அனைவருக்கும் பொதுவானதுதானே?
அவருடைய ஆட்டம், எல்லைகளை கடந்து ஜொலித்தது. தேசிய பொக்கிஷமாக இருந்த பீலே, தன்னுடைய பிரேசில் அணி முன்று முறை உலகக் கோப்பையை வெற்றிபெற ஒரு முக்கிய காரணமாக இருந்ததன் மூலம் ஒரு நிகரற்ற சர்வதேச அடையாளமாக மாறினார். இல்லை, உலகம் அவரை அவ்வாறு ஏற்றுக்கொண்டு, கொண்டாடியது. சூரியன் தன்னை ஒருபோதும் சூரியன் என கூறியதில்லை... அதே போல, பீலே ஒருபோதும் தற்பெருமை கொள்ளவில்லை, அவரின் நிலையான அன்பு, சிரிப்பு மூலம் அவர் தன்னை தனித்துவமாக நிலைநிறுத்திக்கொண்டார்.
1000 கோல்கள், 92 முறை ஹாட்-ரிக் கோல் அடித்தது, மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே கால்பந்து வீரர் (அவர்தான் பிரேசில் அணியின் கேப்டன்), 14 உலகக் கோப்பை போட்டிகளில், 12 கோல் அடித்தது, பத்து மிக முக்கிய கோப்பைகளைத் தனதாகியது வரை, பீலே கால்பந்து மூலம் பெற்றது விட கொடுத்தது அதிகம். மிக அதிகம். வரலாற்றை எழுதத்தொடங்கியவர், காலப்போக்கில் கால்பந்து வரலாற்றையே மாற்றியமைத்தார். அவரது நேர்த்தியான, நேர்மையான ஆட்டம், கால்பந்தை அழகாக்கியது, கடல் கடந்து, மக்களை தன்வசப்படுத்தியது, மனங்களை வென்றது.
விளைவு, உலகெங்கும் உள்ள சிறார்கள் முதல் இளைஞர்கள் வரை பீலே பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து, பீலேவின் வழி ஆட முயற்சித்து, அவர்கள் பீலேவை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தான் வைத்த ஒவ்வொரு அடியிலும், ஒரு மாற்றத்தை தோற்றுவித்தார் பீலே. 1995ஆம் ஆண்டு, பீலே, பிரேசிலின் விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராக அவர் ஆடிய முதல் ஆட்டம், விளையாட்டில் உள்ள ஊழலுக்கு எதிராக. 'பீலே சட்டம்' என்றழைக்கப்பட்ட அவரின் சட்டம், பிரேசில் விளையாட்டுத்துறையை நவீனப்படுத்தியது.
கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நாயகனாக இவ்வுலகம் பீலே கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உண்டு. 1967இல், பீலே பங்குவகித்த பிரேசிலின் 'Santos' அணி, நைஜீரியாவில் விளையாட சென்றபோது, அவரது ஆட்டத்தை காண, அங்கு போர் புரிந்த இரு குழுக்கள், இரண்டு நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. அப்போது போராட்டக்காரர்களின், ராணுவத்தினரின் நோக்கமாக இருந்தது பீலே ஆடும் அழகிய கால்பந்தாட்டத்தை காண வேண்டும் என்று. ஒரு விளையாட்டு வீரனை தேசிய சொத்தாகவோ, ஒரு விளையாட்டு வீரனால் ஆயுதங்களை அமைதியாக்கமுடியுமென்றால், அது பீலேவாகத்தான் இருக்கமுடியும்.
கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர் என அறியப்பட்ட பீலேவிற்கு அறிமுகம் தேவையில்லை என ரொனால்ட் ரீகன் கூறியது போல, பீலே ஒரு கால்பந்தாட்ட ஜாம்பவானாக, அமைச்சராக, தூதராக, நடிகராக, போராளியாக இவ்வுலகிற்கு கொடுத்த வாழ்வு, சாகாவரம் பெற்றது. பிரேசில் அவரை 'Black Pearl' என அழைத்தது, அங்கு இனவெறியால் பாதிக்கப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு, பீலேவும் அவரது வாழ்வும், தங்களின் வாழ்விற்கும், போராட்டத்திற்கும் ஒரு விளக்காக இருந்தது.
போராட்ட குணம் கொண்ட பீலே, உடல்நலப் பின்னடைவின் போதும், அக்குணத்தை விடவில்லை. கோடிக்கணக்கான மக்களின் அன்பில் நிறைந்து வாழ்ந்த ஒரு இதயத்தை, ஒரு நோயால் எளிதில் வீழ்த்திவிடமுடியுமா என்ன? தனது இன்முகச் சிரிப்போடு, தொடர்ந்து போராடினார். கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 'Get well soon, Pele' என ஒட்டுமொத்த உலகமும் பீலேவுக்காக வேண்டியது. ஆனால், இறுதியில், உலகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
உலகை தன் ஆட்டத்தால் கட்டிப்போட்ட பீலே, கொரோனாவாலூம், புற்றுநோயால் ஏற்பட்ட விளைவுகளாலும், தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். ஆனால், ஆட்டம் முடியவில்லை. பீலே கட்டமைத்த கால்பந்தாட்டம், இன்று பன்மடங்கு உயர்ந்து, அவருக்கும் இவ்வுலகிற்கும் மேலும் பெருமை சேர்த்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பாபி சார்ல்டன் ஒரு முறை, "கால்பந்தாட்டம், பீலேவிற்காக கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்" என கூறினார். அவரது கூற்றுதான் எவ்வளவு உண்மை வாய்ந்தது.
ஆமாம், சூரியன்தான் பூமியை உருவாக்கியது. மேற்கே உதித்த பீலே எனும் சூரியன் மறைந்தாலும், பிரகாசிப்பதை நிறுத்தாது. எத்தனை தடைகள் வந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும்! ஏனென்றால், நாம் இருப்பது அது உருவாக்கிய, கட்டமைத்த பூமியில்.
- அழகு முத்து ஈஸ்வரன்