Skip to main content

எடப்பாடி ரகசியத்தை ஒடைக்கட்டுமா? அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் ஓ.பி.எஸ்!!!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020
ddd

 

 

எடப்பாடிக்கும், பன்னீருக்குமிடையே நடக்கும் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. "அன்றைக்கு நடந்த ரகசியத்தை நான் உடைக்கட்டுமா?'' என தன்னிடம் சமாதானம் பேச வந்த சீனியர்களிடம் ஓ.பி.எஸ். சீறியிருக்கிறார்.

 

அவரை டெல்லி ஆதரிக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, அமைச்சர்கள் தங்கமணி-வேலுமணி ஆகியோரை டெல்லிக்கு அனுப்பினார் எடப்பாடி. அதானி முயற்சியில் நடந்த சந்திப்புகளில், எடப்பாடி எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட ஆர்வமில்லை என எடப்பாடியின் தூதர்களிடம் தெரிவித்திருக்கிறது பா.ஜ.க மேலிடம்.

 

இதனை 27-ந்தேதி இரவு டெல்லியிலிருந்து ஓ.பி.எஸ்.சுக்கு ஃபோன் செய்த, அவரது நட்பில் இருக்கும் தமிழக அதிகாரி ஒருவர் தெரிவித்ததுடன், "உங்கள் அரசியலை நீங்கள் செய்து கொள்ளலாம் எனவும் பாஜக தலைவர்கள் நினைக்கின்றனர்'' என சொல்லியிருக்கிறார். செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய பேச்சு வந்தால் ஒரு கை பார்ப்பது என முடிவெடுத்தார் ஓ.பி.எஸ்.

 

ddd

 

அ.தி.மு.க. தலைமையகத்தில் 28-ந் தேதி நடந்த செயற்குழுவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு தேர்தலை சந்திக்கலாம் என்பதற்கும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்கலாம் என்பதற்கும் ஆதரவு அதிகமிருந்தது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்பட செயற்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடிக்கே ஆதரவு தெரிவித்தனர். ஓ.பி.எஸ். தரப்பிடம் இந்த வேகம் இல்லை.

 

இதனால் தனது எதிர்பார்ப்பை ஓ.பி.எஸ்.சே சொல்ல வேண்டியதிருந்தது. குறிப்பாக "ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்டவன் நான்; நீங்கள் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்டவர். இரண்டு வருடங்களுக்கு மட்டுமே நீங்கள் முதல்வர் என்றும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நீங்கள் இருக்கலாம் எனவும் உறுதி கொடுத்ததால்தான் இணைய சம்மதித்தேன்'' என போட்டுத் தாக்கினார்.

 

இதனால் கோபமடைந்த எடப்பாடி, "நம் இருவரையும் முதல்வராக்கியவர் சசிகலாதான். நீங்கள் இணையும்போது, இப்போது நீங்கள் சொல்வதுபோல எந்த நிபந்தனையும் உறுதிமொழியும் தரப்படவில்லை. அப்படி விவாதிக்கப்பட்டிருந்தால் உங்களை இணைக்கவே நான் சம்மதித்திருக்க மாட்டேன். எனது தலைமையிலான இந்த ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள்? நீங்கள் உட்பட எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து கொண்டுதானே இருக்கிறது'' என காரசாரமாக பதிலடி தந்தார் எடப்பாடி.

 

இந்த மோதலை விரும்பாத கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு வந்த சீனியர் அமைச்சர்கள் எல்லோரும் இணைந்து அவர்களை சமாதானப்படுத்த, அப்போதும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்கள். சீனியர்களோ, "நீங்கள் இப்படியே விவாதம் செய்தால் நாங்கள் கட்சி பொறுப்பிலிருந்தும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் விலகிக்கொள்கிறோம்'' என்று சொல்லி இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். தலையிலேயே பொறுப்பை ஏற்றிவைத்தனர்.

 

செயற்குழு முடிந்து எடப்பாடியும், பன்னீரும் தங்கள் இல்லம் திரும்பிய நிலையில் இருவரும் தங்களின் ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். தனக்குத்தான் ஆதரவு பலமாக இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்ட எடப்பாடி, "பொதுக்குழுவைக் கூட்டுவோம். பொதுக் குழு உறுப்பினர்களின் பட்டியலை ஃபோன் நெம்பரோடு எனக்கு கொடுங்கள்'' என தன்னை சந்தித்த அமைச்சர்களிடம் சொல்லியிருக்கிறார்.

 

கே.பி.முனுசாமியிடம் பேசிய ஓ.பி.எஸ்., "செயற்குழுவில் நான் பேசியதில் தவறு ஏதேனும் இருக்கிறதா?'' என்றதுடன், எடப்பாடியின் கோபத்தையும், பதவியை விட்டுக்கொடுக்காத தன்மையையும் எடுத்துச் சொல்லி, "நானும் அமைதியாக இருக்கப்போவதில்லை. பொதுக்குழுவைக் கூட்டுவோம்'' என்று கொந்தளித்திருக்கிறார். 28-ந்தேதி இரவு 11 மணிக்கு வாக்கில் எடப்பாடி வீட்டுக்கு கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலரும் சென்றனர்.

 

அவர்களிடம் எடப்பாடி, "அவருக்கு முதலமைச்சர் வேட்பாளராகணுமா? முதலமைச்சராகணுமா? முதல்வர் பதவியை நான் ராஜினாமா பண்ணிடுறேன். நாளைக்கே அவரை முதலமைச்சராக்கிடுங்க. இணைப்பின் போது சொல்லாததையெல்லாம் சொல்கிறார்னா, அவர் மனசு எந்தளவுக்கு விஷமாகியிருக்கிறது. இந்த ஆட்சியை காப்பாத்த எந்தளவுக்கு சிரமப்பட்டிருப்பேன். ஆட்சியை பாதுகாக்க அவர் எப்போதாவது துணை நின்றிருப்பாரா? போங்க…போங்க…எல்லாம் வெறுத்துப் போச்சு! தேர்தல் செலவையெல்லாம் அவர் ஏத்துக்கிறாரா என கேளுங்க. நான் விலகிக்கிறேன்'' என்று தனது ஆதங்கத்தை கோபமாக கொட்டியிருக்கிறார் எடப்பாடி.

 

எடப்பாடியின் ஆதங்கத்தை சொல்வதற்காக அந்த நள்ளிரவு நேரத்திலேயே ஓ.பி.எஸ்.சை கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும் சந்தித்தனர். கோபப்பட்ட ஓ.பி.எஸ்., "முதலமைச்சராக இருந்து மொத்த கஜானாவையும் அவர் வைத்திருக்கும்போது, என்னை பார்த்து தேர்தல் செலவை பார்த்துக்குவாராங்கிறது என்ன நியாயம்? துணை முதலமைச்சரான என்னிடம் ஆலோசனை கேட்டு எந்த முடிவுகளை எடுத்திருக்கிறார்? எல்லாம் முடிவுகளையும் அவரே எடுத்துவிட்டு என்னை குற்றவாளியாக்க நினைப்பது சரியல்ல. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்றேன்னு அவர் சொல்வதெல்லாம் வெறும் நாடகம்ங்கிறது எனக்கு தெரியும். ஆட்சியை கவிழ்க்க துடித்தேன் என என்னை குற்றம் சாட்டும் அவருக்கு ஒரு ரகசியத்தை உடைத்து காட்டட்டுமா? கட்சி பிளவுபட்டது எப்பன்னு சொல்லட்டுமா? நான் வாய் திறந்தால் அவர் தாங்கமாட்டார்'' என சீறியிருக்கிறார் ஓ.பி.எஸ். .

 

dddd

 

 

நள்ளிரவு சந்திப்புகளுக்கு பிறகு, 29-ந் தேதி காலையில் ஓ.பி.எஸ் சொன்னபடி அவரது காரிலிருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டிருக்கிறது.

 

துணை முதல்வர் பதவியை ஓ.பி.எஸ். ராஜினாமா செய்கிறார் என்பதாக தகவல் பரவ, அமைச்சர்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பதட்டமானார்கள். அவசரம் அவசரமாக ஓ.பி.எஸ். இல்லத்துக்கு வந்த கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும், பதட்டத்துடன் விசாரிக்க, "ஆட்சியில் எந்த பதவியும் வேண்டாம்னு தெளிவா முடிவெடுத் துட்டேன். துணை முதல்வர் பதவியை ரிசைன் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். பொதுக்குழுவைக் கூட்டுவோம். அங்கு முடிவு செய்யலாம். வழிகாட்டும் குழு அமைக்கும் அறிவிப்பைத் தவிர, இனி கட்சி ரீதியிலான எந்த அறிவிப்பிலும் நான் கையெழுத்து போட மாட்டேன்.

 

முதல்வர் வேட்பாளர் அவர்தான் எனில், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தவிர, இணை ஒருங்கிணைப் பாளர் பதவி தேவையில்லை. அந்த பதவி ரத்து செய்யப்பட வேண்டும். ஆட்சிக்கு ஒற்றைத் தலைமை இருப்பது போல கட்சிக்கும் ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாகத்தான் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறேன்'' என்று சொல்ல, பதறிப்போன அமைச்சர்கள், ஓ.பி.எஸ்ஸை சமாதானப்படுத்த முயன்றனர்.

 

எடப்பாடி-பன்னீருக்கும் இடையிலான மோதல் வலுத்துவரும் நிலையில், எடப்பாடி பற்றி ஓ.பி.எஸ். சொல்லும் அந்த ரகசியம் என்ன என விசாரித்தபோது, "ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தத்தால் கட்சி பிளவுபட்டதன் பின்னணியில், அதனைத் தூண்டிவிட்டதே எடப்பாடிதான். சசிகலா முதல்வராவதற்கு வசதியாக, டி.டி.வி. தினகரன் சொன்னதையேற்று மனப்பூர்வமாக ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். ஆனால், சசிகலா முதல்வராவதை டெல்லி விரும்பவில்லை. ஓ.பி.எஸ்.சை வைத்து கேம் ஆட நினைத்தது. அதனை எடப்பாடியிடம்தான் முதலில் சொன்னார் ஓ.பி.எஸ்.

 

sasikala

 

அப்போது எடப்பாடி, சசிகலா அதிகாரத்துக்கு வந்துட்டா மீண்டும் நாம் அடிமைகளாகத் தான் இருக்கணும். மன்னார்குடி கும்பலின் அராஜகம் தாங்க முடியாது. இதுதான் சந்தர்ப்பம், நீங்கள் சசிகலாவுக்கு எதிராக பிரச்சனையை துவக்குங்கள். என்னை ஆதரிக்கும் 32 எம்.எல்.ஏ.க்களுடன் முதல் நபராக உங்கள் பின்னால் நான் வருகிறேன். அதைப்பார்த்து பெரும்பாலானோர் நம்மிடம் வந்துவிடுவார்கள். கட்சியும் ஆட்சியும் நம்மிடம் வரும். டெல்லியின் சப்போர்ட்டும் உங்களுக்கு இருப்பதால் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்காது என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அதனையும் நம்பி தர்மயுத்தத்தை ஓ.பி.எஸ். நடத்த, அவரை ஏமாற்றிவிட்டார் எடப்பாடி.

 

சசிகலா முதல்வராவதை டெல்லி விரும்பாத நிலையில், சாதுர்யமாக ஓ.பி.எஸ்.ஸை விலக வைத்து, முதல்வர் பதவியை தன் வசமாக்கிக்கொண்டவர் எடப்பாடி. இதுதான் அந்த ரகசியம்'' என்று விவரிக்கிறார்கள்.

 

இந்த சூழலில், டெல்லி அதிகாரிகள் மத்தியில் தனது அப்பாவுக்கான ஒரு லாபியை ஓ.பி.எஸ்.சின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் உருவாக்கி வைத்திருக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கட்சியை கைப்பற்றும் அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார் ஓ.பி.எஸ்.

 

 

சார்ந்த செய்திகள்