Skip to main content

அதிரடி உறுப்பினர் சேர்க்கை! ஓட்டாக மாற்றுமா தி.மு.க.?

Published on 14/10/2020 | Edited on 14/10/2020
dmk

 

 

"எல்லோரும் நம்முடன்' என்ற முழக்கத்தை முன்வைத்து இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்துமாறு, மா.செ.க்கள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட, நல்ல ரெஸ்பான்ஸ்.

 

ஒவ்வொரு நாளும் எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் என்பது வெளிப்படையான கணக்காக வெளியிடப்படுகிறது. அதேநேரத்தில் ட்ரம்புக்கு தி.மு.க. உறுப்பினர் அட்டை போன்ற ஆன்லைன் கோல்மால்களும் நடக்கின்றன. இவற்றை முறைப்படுத்தி, உண்மையான உறுப்பினர்களாக சேருபவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், வித்தியாசமான முறையில் முகாமை செயல்படுத்தி வருகிறார் தி.மு.க. தலைமைக்குழு தீர்மான உறுப்பினர் செஞ்சி சிவா. விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருக்கும் கிராமங்கள் தோறும், பெரிய வாகனத்தில் மக்களைத் தேடிச்சென்று, உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறார்கள்.

 

நாம், அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சில கிராமங்களுக்கு சென்றோம். திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பஸ் ஸ்டாப் அருகில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து தி.மு.க.வில் இணைய வந்தவர்களுக்கு, வாகனத்தில் கொண்டுவந்த கணினிகள் மூலம் உறுப்பினர் பதிவு செய்யப்பட்டு, அங்கேயே லேமினேஷன் செய்து பத்தே நிமிடத்தில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதற்காகவே பத்துக்கும் மேற்பட்ட கணினி பயிற்சிபெற்ற இளைஞர்களும் வந்திருந்தனர்.

 

உறுப்பினர் சேர்க்கைக்காக செல்லும் வாகனத்தில் இருக்கும் பிரம்மாண்ட எல்.இ.டி. திரையில், கலைஞர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள்நல திட்டங்கள், முன்னெடுப்புகள், எதிர்கால வாக்குறுதிகள், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என அனைத்தையும் மக்களிடையே காட்சிகளாக ஒளிபரப்புகிறார்கள். 

 

 

dmk

 

இடையிடையே ‘எல்லோரும் நம்முடன்’ முழக்கத்திற்கான நோக்கம் குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்குவதும், நீட் தேர்வின் கொடுமைகள் தொடர்பாக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பேசும் உருக்கமான காட்சிகளும் வந்து போகின்றன.

 

மைலம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடந்த உறுப்பினர் சேர்க்கையின்போது தேர்தல் வாக்களிப்பதுபோல பொது மக்கள் வரிசையில் காத்திருந்து உறுப்பினர் அட்டைகளை வாங்கி சென்றனர். 

 

அதில் தீவனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞரிடம் நாம் பேசியபோது, "அ.தி.மு.க. ஆட்சியில் எல்லா வேலைக்கும் பணம்தான். கரோனாவிலும் கொள்ளை அடிக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து மக்களிடமே கொடுத்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள், இனி இது நடக்காது. ஸ்டாலினும் தி.மு.கவும்தான் தமிழகத்தின் தற்போதைய நம்பிக்கை என்பதால் இளைஞர்கள் உற்சாகத்துடன் தி.மு.க.வில் இணைய வந்திருக்கிறோம்'' என்றார்.

 

dmk

 

எல்லம்மாள் என்கிற இளம்பெண் நம்மிடம், "நான் பி.எஸ்.சி. நர்சிங் படிச்சிருக்கேன். கடந்த காலங்கள்ல தி.மு.க. ஆட்சியில் வேலைவாய்ப்புகள் நிறைய இருந்தது. குறிப்பா, பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில், சுகாதார நிலையங்களில், அரசுப் பள்ளிகளில் எளிதா வேலை கிடைச்சதா என் பெற்றோர் எனக்குச் சொன்னாங்க. இந்த முகாமில் காட்டிய தி.மு.க.வின் சாதனைத் திட்டங்களைப் பார்த்ததும்தான், என் பெற்றோர் சொன்னது உண்மைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து தொடர்ந்து குரலெழுப்பும் கட்சி என்பதால், தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறேன்'' என்றார் நம்பிக்கையுடன்.

 

dmk

 

"தி.மு.க. ஆட்சியில் ஏழை குடிசைவாழ் மக்களுக்கு ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காமல் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார் கலைஞர். இன்று ஆட்சி மாறியதும் அந்தத் திட்டத்தையே அலங்கோலப்படுத்தி விட்டார்கள். தமிழகமே நாறிப் போச்சு. ஆட்சி மாறணும்'' என்கிறார் தி.மு.க.வில் இணைந்திருக்கும் பெரியவர் ஏழுமலை.

 

வித்தியாசமான முறையிலும், கிராம மக்களைக் கவரும் வகையிலும் நடமாடும் உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒருங்கிணைத்த செஞ்சி சிவா நம்மிடம், "தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை வெளியே தெரியாமல் மறைத்து, எங்களுக்கெதிராக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள் ஆளுங்கட்சியினர். எனவே, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இப்படியொரு யோசனை. 10 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்களாக இருந்த இன்றைய இளைஞர்களுக்கு தி.மு.க ஆட்சி சாதனைகள் தெரியாமல் இருந்தது. இந்த முகாமின் மூலம் அந்தநிலை முற்றிலுமாக மாறியிருக்கிறது'' என்றார் உற்சாகமான குரலில்.

 

“பொதுவாகவே பெரிய அரசியல் கட்சிகள் நடத்தும் உறுப்பினர் சேர்க்கையில், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு உறுப்பினர் அட்டை கொடுப்பதில்லை. உள்கட்சி தேர்தல் சமயங்களில் இந்த அட்டைகளை மொத்தமாக காட்டி, கட்சி பதவிகளைப் பிடிப்பார்கள். இதுபற்றிய குற்றச்சாட்டுகள் தி.மு.க.வில் அதிகமாக இருந்தது. அதை மாற்றியிருக்கிறது, அண்ணா பிறந்தநாளில் ஸ்டாலின் தொடங்கிய ‘எல்லாரும் நம்முடன்’ திட்டம். அதனை விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வேகமாக செயல்படுத்துகின்றன. அதுபோலவே இன்னும் சில மாவட்டங்களும் வேகம் காட்டுகின்றன. அனைத்துப் பகுதிகளிலும், ஆர்வமிக்க புதிய இளைஞர்களையும் பெண்களையும் உறுப்பினராக சேர்த்தால், கட்சிக்கு வலுசேர்க்கும். அது ஓட்டாக மாறும். வெற்றுக்கணக்கு காட்ட நினைக்கும் நிர்வாகிகளை களையெடுத்தாலே எல்லாரும் நம்முடன் என்பதை உறுதிப்படுதிவிடலாம்'' என்கிறார்கள் உண்மையான உடன்பிறப்புகள்.