Skip to main content

வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படியெல்லாம் மோசடி வித்தைகள் செய்யலாம்? அமெரிக்க விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

2016 அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடந்ததா? என்ற கேள்விக்கு அங்கு விடை காண ஆய்வுகள் நடைபெற்றன. இந்தியாவிலும் அந்தச் சந்தேகம் பரவலாக எழுந்தது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 

america evm machine


2019 இந்திய மக்களவைத் தேர்தல் வாக்காளர்களின் மனநிலையை எதிரொலிப்பதாக இல்லை. நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகமாக இருந்தது. ஆனால், மோடி பெரும்பான்மை இடங்களுடன் ஆட்சியை பிடித்தார். இந்நிலையில்தான், தேர்தல்களை வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடத்துவதா? பழைய முறையில் வாக்குச்சீட்டு அடிப்படையில் நடத்துவதா என்ற விவாதம் வலுப்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் வாக்குப்பதிவு எந்திரத்தை கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டியதில்லை என்று நிரூபித்திருக்கிறது.

இந்திய எதிர்க்கட்சிகள் இப்போது வாக்குச்சீட்டு முறைக்கு மாறவேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றன. சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளும் நிபுணர்களும் வெளியிடும் ஆய்வு முடிவுகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த காரணமாகின்றன.

பொதுவாக வாக்குப்பதிவு எந்திரத்தை குறைகூறினால், இந்திய தேர்தல் கமிஷன் இரண்டு சமாதானங்களைச் சொல்லி சமாளிக்கும். நமது வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவை, மோசடி செய்ய முடியாதவை. வாக்குப்பதிவு எந்திரத்தை இணையத்துடன் இணைக்க முடியாது. அது தனித்து இயங்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்படும்.

இந்த இரண்டு சமாதானங்களுமே இப்போது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகிறது. மூன்றாவது ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, அரசுத்துறை நிறுவனங்கள் மூலமாக மட்டுமே வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு பிறகான நேரத்திலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்ட பகுதியிலும் கொண்டுசெல்லப்பட்டது. வினியோகிக்கப்பட்டது. அமெரிக்க ஆராய்ச்சி என்ன சொல்கிறது என்றால் எந்திரத்தை தயாரிக்கும் நிலையிலேயே மோசடி செய்ய முடியும் என்கிறது.

 

 

america



அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ள உண்மைகளைப் பார்க்கலாம்…

1.   கம்ப்யூட்டர் தொழில்நுட்ப ஆய்வாளர் கிம் ஸெட்டர் தனது ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளுக்காக நான்கு விருதுகளை பெற்றவர். வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி சந்தேகத்துக்குரிய வகையில் ஜனநாயகத்தை பாதிக்கிறது என்றும், ஒப்புகைச்சீட்டை இணைத்தாலும் எப்படி வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தமற்றதாகிறது என்பதையும் இவர் விளக்கி எழுதி இருக்கிறார்.

2.   வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்தால் திரையில் வேறு ஒரு வேட்பாளரின் பெயர் தெரிவது எப்படி என்று பென்சில்வேனியா தேர்தல் அதிகாரிகளை அமெரிக்க பேராசிரியர் ஒருவர் கேட்டிருக்கிறார். வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், வேறு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று இவர் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

3.   வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையங்கள் சொன்னாலும், சுயேச்சையான கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளோ, மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடுகிறார்கள். அதாவது, வாக்குப்பதிவு எந்திரம் வலுவான பாதுகாப்பு அமைப்புடன் வடிவமைக்கப்படவில்லை. இந்தியாவில் கூறப்படுவதைப் போலவே, அமெரிக்காவிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் தூரத்திலிருந்து இயக்கப்படுகின்றன என்று குறைகூறப்படுகிறது. தேர்தல் ஆணையங்கள் எத்தனை முறை மறுத்தாலும், வைஃபை, புளூடூத் போன்றவை மூலம் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்று சொன்னாலும், வெளிவரும் ஆய்வு முடிவுகள் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.

4.   அமெரிக்காவின் முக்கியமான வாக்குப்பதிவு எந்திர தயாரிப்பு நிறுவனமான இஎஸ்&எஸ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது. சில சமயம் தனது நிறுவனம், தொலைதூரத்திலிருந்தும் இணைக்கப்படும் அமைப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரித்து வினியோகிப்பதாக அது கூறியுள்ளது. ஒருவேளை முன்னரே எந்திரத்தில் பொருத்தாவிட்டாலும், தேர்தல் அதிகாரிகளே மோடத்துடன் இணைக்கும் வகையில் பொருத்திக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும் அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இதன்மூலம் இறுதி ரிசல்ட்டை சந்தேகத்திற்கு இடமின்றி சமன் செய்ய முடியும் என்று அது கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

america



5.   மேலும் பல நிறுவனங்கள் இணையதளத்துடன் இணைக்கும் வசதியுடனே எந்திரங்களை தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது மோசடி செய்ய ரொம்ப வசதியானது. இந்த உண்மையை பல மாநில மற்றும் மத்திய தேர்தல் அதிகாரிகளே அறியாமல் இருக்கிறார்கள். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி அதிகாரிகள் பதிவான வாக்கு விவரங்களை மோடம் வழியாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்கள். இந்த மோடம்களில் பெரும்பாலானவை செல்லுலர்கள். இவை பெரும்பாலும் ரேடியோ சிக்னல்களையே கால்களாகவும், டேட்டாகளாகவும் செல்போன் டவர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க்கிற்கு சொந்தமான ரவுட்டர்களுக்கு அனுப்புகின்றன. இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் அதிகமாக இவற்றை வைத்திருக்கின்றன. லேண்ட்லைன் மோடம்களை பயன்படுத்தினாலும்கூட அவற்றிலிருந்து மற்ற ரவுட்டர்களுக்கு விவரங்களை எளிதில் கடத்த முடியும். அந்த அளவுக்கு சமீபகாலத்தில் டிஜிட்டல் அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, திறமைமிக்க ஹேக்கர்கள் எளிதாக வாக்குப்பதிவு விவரங்களை தேர்தலன்று இரவிலேயே பரிமாற முடியும். வாக்குப்பதிவு எந்திரங்களில் வைரஸ்களை செலுத்தவோ, தேர்தல் எந்திர மென்பொருளை மாற்றி அமைக்கவோ, உண்மையில் பதிவான வாக்குகளை மாற்றவோ இவர்களால் முடியும்.

6.   வேறு சில வழிகளும் இருக்கின்றன. அனுபவம்வாய்ந்த ஹேக்கர் டெலிகாம் ரவுட்டர்கள் வழியாக ஊடுருவி தேர்தல் முடிவுகளை திருத்த முடியும். மற்ற டிஜிடல் கருவிகளைப் போலவே, டெலிகாம் ரவுட்டர்களும் மோசடிக்கு இடமளிப்பவையே. சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனின் உளவு அமைப்பு, பெல்ஜியம் நாட்டின் டெலிகாம் நிறுவனமான பெல்ககாமிற்கு சொந்தமான ரவுட்டர்களை குறிவைத்து, அவற்றின் வழியாக வரும் மொபைல் தகவல்களை ஊடுருவியதைக் குறிப்பிடலாம்.

இவையெல்லாம் கணக்கில் கொண்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையையே பின்பற்ற வேண்டும். எல்லாத் தேர்தல்களையும் மறு தணிக்கை செய்ய வேண்டும். இந்தியாவில் சுதந்திரமான சுமுகமான தேர்லை நடத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு முன்னணியை உருவாக்கி, ஒரே குரலில் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்த வேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்