சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில், மனுநீதி தொடர்பாக அவர் ஆற்றிய உரை வருமாறு, "சமூக நீதிக்கான விருது எனக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒரு 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையை ஆதரிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு தனிநபர் துதிபாடலுக்கும் இடமின்றி சமூக நீதிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, அதுவும் தாய்க் கழகமான திராவிடர் கழகம், இந்த விருதை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒன்றும் தனிப்பட்ட திருமாவளவனை பெருமைப்படுத்தும் விதத்தில், வழங்கப்பட்டதாக நான் கருதவில்லை. நம் பின்னால் இருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருக்கும் என்பதைமட்டும் நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் சொல்கிறேன் இது தனிப்பட்ட திருமாவளவனை மகிழ்விப்பதற்காகக் கொடுக்கப்பட்ட விருதாக நான் நினைக்கவில்லை. சமூகநீதியை நிலைநாட்டும் பொறுப்பு எங்களுக்கு இதன் மூலம் அதிகரித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால் இந்த விருதை எனக்கு அளித்ததன் மூலம் திராவிடக் கழகத்துக்கு எந்தப் பலனும் கிட்ட போவதில்லை. எனவே யாரும் இதில் உள்நோக்கம் கற்பிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
எத்தனையோ படையெடுப்புகள் இந்த தேசத்தின் மீது நடைபெற்றுள்ளன. அந்நியன் இந்த தேசத்தின் மீது படையெடுத்து வந்தான். இந்த நாட்டைக் கட்டி ஆண்டான். ஆனாலும் அவனும் இந்தச் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவேண்டும் என்று விரும்பியது இல்லை. ஒரே குளம், ஆனால் தனித்தனி படித்துறைகள் இருந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடம் இருக்கலாம். ஆனால் சாதிக்கு சாதி தனித்தனி படித்துறைகள் இருந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சில இடங்களில் நாம் பார்த்தும் இருக்கிறோம். தனித்தனி குலதெய்வங்கள், தனித்தனி திருமணச் சடங்குகள் என அனைத்தும் இன்றளவும் தனித்தனியாகவே இருக்கிறது. அனைவரும் இந்துக்களாக இருந்தாலும், திருமணச் சடங்குகள் வெவ்வேறாகவே இன்றளவும் இருந்துவருகிறது. எல்லாச் சாதியினரும் இந்து என்றால், ஏன் அனைவரும் ஒன்றாகச் சடங்கு செய்யவில்லை. இதற்குப் பின்னால் என்ன மறைந்திருக்கிறது என்று நாம் ஆராய்ந்தால் அதற்குப் பின்னால் 'மனு' என்ற நூல் ஆலமரமாக இருக்கிறது என்பதை அறியலாம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை மிக எளிதாக மக்களுக்கு அந்த நூல் கொண்டு சேர்கிறது.
மனுநூல்தான் சத்திரியர்கள் கீழ் நிலையில் இருப்பவர்கள் என்றும் அதனினும் கீழானவர்கள் சூத்திரர்கள் என்றும் பல பிரிவுகளை மேற்கோள்காட்டுகிறது. அந்த நூலை அடிப்படையாகக் கொண்டுதான் இவர்கள் அனைவரும் குல தெய்வத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், யாகம் நடத்த வேண்டும், வாழ்க்கை முறைகளை அதில் கூறியபடி நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மனிதர்களை மட்டமான முறையில் சித்தரித்தது மட்டுமல்லாது சாதியின் பெயரால் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்துப் பார்க்கவேண்டும் என்ற தத்துவத்தையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. இது இன்றைக்கு சமூக ஓட்டத்தில் பரவலாக்கப்பட்டு உள்ளது. அதனை நாம் வீழ்த்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இதற்கான ஒரு களமாக நாம் இதனைப் பார்க்க வேண்டும்" என்றார்.