
பெங்களூரூவில் இரண்டாம் முறையாகக் கூடவிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டம், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் பால்கி நமக்கு அளித்த பேட்டி.
இரண்டாவது கட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூரில் நடைபெறும் அதே நாளில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்களே?
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூடியபோது, இந்த கூட்டம் கலைந்து விடும் என்று அமித்ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் பேட்டி கொடுத்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் கூடிய முதல் கூட்டத்தின் தாக்கம் தான் இன்று அவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கூடியபோது அனைத்து கட்சிகளை ஒன்றிணைப்பது ஒரே கட்டமாக நடைபெறுவதற்கு சாத்தியமல்ல. அதனால், இந்த கூட்டம் நான்கு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்தார்கள். 3 மற்றும் 4வது கூட்டம் அவர்களுடைய செயல் திட்டமாக இருக்கும் என்று கூறினார்கள். அவர்கள், திட்டமிட்ட வரையில் அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து இன்றைக்கு இரண்டாவது கட்ட கூட்டமாக வந்திருக்கிறது. முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கூட இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொள்வதாக அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் மூலம் நடந்திருக்கிறது.
ஆனால், பாஜக, பாமக, ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறியிருக்கிறார்கள். யாரெல்லாம், ஒரு கட்சியாக இருந்து அவர்கள் பதவிக்காக வெளியே வருகிறார்களோ அவர்களை அணியாக சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் கட்சியாக பார்க்கப்படவில்லை. அது வெறும் குழு தான். ஷிண்டே அவருடைய கட்சியிலிருந்து பிரிந்து வருவதற்கு அமலாக்கத்துறை பாஜகவுக்கு பெரிய அளவில் உதவி புரிந்தது. அதே அஜித் பவாரின் சொத்துக்கள் முடக்கம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு அமலாக்கத்துறை பயன்பட்டது. தமிழ்நாடு, மகாராஸ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கட்சிகளில் அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு அதன் மூலம் பிரிவை உண்டாக்குவார்கள். இது ஜனநாயக அரசியல் அல்ல. குற்றவாளிகளின் அரசியல் கூட்டமாகத் தான் பார்க்கப்படுகிறது. அந்த கூட்டம் தான் டெல்லியில் கூடப்போகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்த அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வாரா?
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அணிக்கும், தமிழ்நாடு பாஜகவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அமித்ஷா, இவர்களை ஒன்றிணைக்க பேச்சுவார்த்தை நடத்தினாலும் இந்த இருவருக்கும் ஒற்றுமை என்பது இன்னும் வரவில்லை. அதை சமீபத்தில் ஜெயக்குமார் பேசிய பேட்டிகள் அனைத்தையும் பார்த்தாலே தெரியும். ஆனால், நான்கு நாட்களுக்கு முன் பேசிய பன்னீர் செல்வம், ‘பாஜக எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். அது பற்றி எடப்பாடியிடம் கேட்டபோது இதை ‘நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்’ என்று கோபத்தோடு சொல்கிறார்.
ஆனால், இன்றைக்கு எடப்பாடியின் கோபத்தை சரி செய்வதற்கு தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி சட்டப்பூர்வமாக அவர் பெற்றிருக்கும் பட்டியலுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். அதனால், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மற்றும் பாஜக ஆகியவற்றோடு முரண்பட வேண்டும் என்று எடப்பாடி என்றைக்கும் நினைக்கமாட்டார். அவர்களோடு ஒன்றிப் போகத்தான் நினைப்பார். அந்த கூட்டத்திற்கு பன்னீர் செல்வத்தை விட்டு எங்களை மட்டும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை பாஜக எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த கூட்டத்திற்கு எடப்பாடி கலந்து கொள்வதற்கு அதிகபட்சமான வாய்ப்புகள் உள்ளன.