Skip to main content

ஊரடங்காவது, தடையாவது... 'அட்சய திருதியை' நாளில் சக்கைப் போடு போடும் தங்கம் விற்பனை... 

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் ஒரு கிராம் நகையாவது எடுக்கணும் என்று மக்கள் நகைக் கடைகளுக்குச் செல்வார்கள். அன்றைய தினம் நகைக்கடைகள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்த வருடம் ஊரடங்கு காலமான 26.04.2020 ஞாயிறுக்கிழமையான இன்று அட்சய திருதியை வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவில் நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைகளை நேரில் சென்று பார்த்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய நகைக் கடைகள் ஆன்லைன் மூலம் தங்களது கடையில் உள்ள நகைகளின் டிசைன்களை வெளியிட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளன. 
 


 

 

Gold



பெரும்பாலான நகைக்கடைகள் மாதாந்திர சீட்டு நடத்தி வருகின்றன. தங்களிடம் சீட்டு கட்டி வரும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தவும், தங்களது நகைகளை விற்பனை செய்யவும் முடிவு செய்த அந்தக் கடை நிர்வாகம், தங்களிடம் சீட்டு கட்டி வரும் வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு, ஒரு கிராம் விலை எவ்வளவு எனத் தெரிவித்து, எத்தனை கிராம் வேண்டும் என போனில் பேசி முடித்துவிட்டு, சரியாக இத்தனை மணிக்கு வாருங்கள் என்று தெரியப்படுத்துகிறது. அதன்படி வாடிக்கையாளர்களும் நகைக்கடைகளுக்குச் செல்கின்றனர். 
 

ஒரு கிராம் காயின் முதல் வாடிக்கையாளர்கள் விரும்பிய நகைகள் வரை விற்று வருகிறார்கள் நகைக்கடையினர். தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளிப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார்கள். தங்கம் வியாபாரம் சென்னை, திருச்சி, கோவை, தஞ்சை எனத் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் எந்தத் தடையும் இல்லாமல் நடக்கிறது. தகவல் அறிந்த சில அரசின் உயர் அதிகாரிகளையும் நகைக்கடைக்காரர்கள் சரி செய்துவிட்டார்களாம். பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்களும் நகைக் கடைக்காரர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்களாம். 


-மகேஷ்