Skip to main content

கோவை சூலூரில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா தொழிற்சாலை அரசு அதிகார மையத்திற்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை - ஈஸ்வரன்

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
eswaran

 

கோவை சூலூரில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா தொழிற்சாலை அரசு அதிகார மையத்திற்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.  அவர் இது குறித்த அறிக்கையில், ’’கோவை சூலூரில் குட்கா தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளை கண்டுபிடித்து வெளிக்கொணர தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட உடன் இந்த குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது.

 

அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் ஒரு தொழிற்சாலை தொடர்ந்து நடத்த முடியாது. அவ்வளவு பெரிய தொழிற்சாலை தொடர்ந்து நடந்து கொண்டு இருந்திருக்கிறது. அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். யார் நம்மை கேட்க போகிறார்கள் என்ற தைரியத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்திருக்கலாம். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உடன் பயந்து கொண்டு தாங்களே கண்டுபிடிப்பது போல கண்டுபிடித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகள் அரசாங்கத்தில் உள்ள ஒருசிலரின் ஆதரவோடு செயல்பட்டுக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை தமிழக அரசிற்கு இருக்கிறது. தமிழகம் முழுவதும் பரிசோதனையை தீவிரப்படுத்தி குட்கா ஆலைகளை கண்டுபிடிக்க ’’என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
TN is forever a Dravidian fortress CM MK Stalin

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு நிறைவு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என ‘முப்பெரும் விழா’ கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று (15.06.2024) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களைப் பேசினார்கள். தமிழர்கள் குறித்து அவதூறு பரப்பினார்கள். வாட்ஸ் ஆப்பில் பொய்ச் செய்திகளைப் பரப்பினார்கள். இவ்வளவும் செய்தும் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. இப்போது அவர்கள் பெற்றிருப்பது வெற்றியல்ல தோல்விதான். பாஜகவிற்கு அதிக பெரும்பான்மை இருந்தபோதே, வாதங்களால் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நமது எம்.பி.க்கள். இப்போது, மக்களுக்கான நமது குரல் நாடாளுமன்றத்தில் இன்னும் வலுவாக ஒலிக்கப் போகிறது. திமுக தொண்டர்களாலும், கூட்டணிக் கட்சிகளாலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது. திமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த வெற்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். 

TN is forever a Dravidian fortress CM MK Stalin

நாடாளுமன்ற உறுப்பினர்களே நாங்களும், தமிழ்நாட்டு மக்களும் உங்கள் தோளில் ஏற்றி வைத்திருக்கும் இந்தக் கடமைகளுக்காக தமிழ்நாட்டு உரிமைகளுக்காக, நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள். பலம் பொருந்திய எம்.பி.க்கள் சேர்ந்து, பலவீனமான மைனாரிட்டி பாஜக அரசை பாசிச பாதையில் செல்லாமல் தடுங்கள். ஒற்றுமை உணர்வுடன் கொள்கை திறத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள்தான் பாஜகவைக் கொள்கை, கோட்பாடுகள் ரீதியாக அம்பலப்படுத்தினார்கள். கொள்கை ரீதியாக அவர்களுடைய வகுப்புவாதத்தை, எதேச்சாதிகாரத்தை, பாசிசத்தை விமர்சிக்கின்ற பாணியை இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தவர்கள் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். சமூகநீதிக்காக இந்திய நாடாளுமன்றத்தில் அதிகமாக உரிமைக்குரல் எழுப்பியது மூலமாக, இந்திய அரசியல் செல்ல வேண்டிய பாதையைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டுக் கொடுத்தார்கள்.

எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து குளோஸ் (Close) செய்துவிட்டார். அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது. 

TN is forever a Dravidian fortress CM MK Stalin

அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள். அதற்கு நன்றி. 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு சொல்வது. மெஜாரிட்டி பாஜக இருக்கும்போதே நாடாளுமன்றத்துக்குள் முழங்கியவர்கள் மைனாரிட்டி பாஜகவிடமா அடங்கிப் போவார்கள். வெயிட் அண்ட் சி (Wait and See)” எனத் தெரிவித்தார். 

Next Story

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Case against Isha Foundation; High Court action order

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளுவாம்பட்டியில் மின் தகன மேடை ஒன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என். சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதியானது குடியிருப்பு பகுதி ஆகும். இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே மின் தகன மேடையை அமைக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (12.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மனுதாரர் வசிக்கும் பகுதி குருட்டுப்பள்ளம் ஆகும். அப்பகுதியில் மனுதாரர் மட்டுமே உள்ளார். மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் ஒரு மேற்கூரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த குடியிருப்பு வாசிகளும் இல்லை. மனுதாரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி அரசு ஊழியராக உள்ளார். இவர்கள் போலியான முகவரியைச் சமர்ப்பித்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் தகன மேடையால் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே உள் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. 

Case against Isha Foundation; High Court action order

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “மின் தகன மேடையால் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் தகன மேடை அமைக்கும் முன்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆட்சேபனையைக் கேட்காமல் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். அப்போது ஈஷா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் குறுக்கிட்டு வாதிடுகையில், “அந்தத் தகன மேடை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அங்கு நவீன முறையில் எல்.பி.ஜி. எரிவாயு மூலமாக உடல்கள் எரியூட்டப்படவுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு (25.06.2024) ஒத்தி வைத்துள்ளனர்.