Skip to main content

மாறிய கட்சிகளும் காட்சிகளும்; 2021 அரசியல் கடந்துவந்த பாதை! 

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

2021 Tamil Nadu Politics Path

 

ஆல்பா முதல் தற்போது ஒமிக்ரான் வரை கோவிட்19-ன் மரபணு மாற்றம் முடிவு தெரியா சங்கிலியாய் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கையில், 2021 நாட்காட்டி முடிவுற்று 2022 நாட்காட்டியும் கிழிக்கப்படத் தயாராய் நின்றுகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில், நம் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வகையில் 2021ஆம் ஆண்டு நடந்த சில அரசியல் நிகழ்வுகளைப் புரட்டி பார்த்துவிட்டு, 2022 நாட்குறிப்பைத் துவங்குவோம்.

 

சசிகலா வருகை:


புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து 2021ன் முதல் மாதத்தின் அந்திம காலத்தில் வெளியான அந்தச் செய்தி அதிமுகவை அதிரவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். சசிகலாவால் முதலமைச்சர் பதவியில் அமரவைக்கப்பட்ட இ.பி.எஸ்.சும், ஜெ. மரணத்தில் உள்ள மர்மத்தின் விளக்கம் கேட்டு தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.சும் ஒரே அணியில் இருந்து சசியை எதிர்த்தனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக சிறைச் சென்றவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவராக வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளிவந்தவர், கரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சிகிச்சைகளை முடித்து பிப்ரவரி மாதம் 8ம் தேதி அதிமுக கொடி பொருத்திய காரில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு தமிழ்நாடு நோக்கி பயணித்தார். அதிமுக கொடியை அவர் பயன்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பும், அறிவிப்பும் அதிமுக தரப்பிலிருந்து வெளிவந்தது.

 

2021 Tamil Nadu Politics Path

 

அதேசமயம் அவர் தமிழ்நாடு எல்லையான கிருஷ்ணகிரி அடைந்ததும், அதிமுக கொடியுடன் முன்பக்கம் ஜெ. புகைப்படமும் பொருத்தப்பட்ட அதிமுக நிர்வாகி ஒருவரின் காரில் ஏறி பிப். 9ம் தேதி சென்னையில் தன் பயணத்தை முடித்தார். அதன்பிறகு அரசியலிருந்து ஒதுங்கியிருக்கிறேன் என அறிக்கை, தேர்தல் முடிந்து அதிமுகவின் தோல்விக்கு பிறகு மீண்டும் அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசுவது, அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அறிக்கைகளை விடுவதென தொடர்ந்து அரசியலில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். ஆனால், சசியால் முதலமைச்சரான இ.பி.எஸ்.சும், தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.சும் ஒரே அணியாக சசியை எதிர்த்துக்கொண்டிருக்க... இவர்கள் தொடர்பான பேச்சுக்களும், அதிமுகவை சசி கைப்பற்றுவார் எனும் பேச்சுக்களும், 2021ன் முடிவு வரை அவ்வப்பொழுது பரபரப்பை கிளப்பிக்கொண்டுதான் வந்திருக்கின்றன.

 

ஜனநாயக திருவிழா:


ஜெயலலிதா இல்லா அதிமுக, கலைஞர் இல்லா திமுக, அதிமுகவின் இரட்டை தலைமை சிக்கல், மு.க.ஸ்டாலின் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு, ஜெ. மறைவுக்கு பிறகான அதிமுக மீதான மக்களின் அதிருப்தி, வென்றே ஆகவேண்டும் என்ற திமுகவுக்கான நெருக்கடி, அதிக இடங்களில் போட்டியிடும் பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்ற கேள்வி என பல காரணிகளால் முக்கியத்துவம் பெற்ற 2021ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் உண்மையில் ஜனநாயக திருவிழாவாகத்தான் இருந்தது.

 

2021 Tamil Nadu Politics Path

 

திருவிழா என்றாலே கொண்டாட்டங்கள், சண்டைகள், சர்ச்சைகள் இருக்கத்தானே செய்யும். அதுபோலத்தான் இந்த ஆண்டின் பெரும்பாலான கொண்டாட்டங்கள், சண்டைகள், சர்ச்சைகள் எல்லாம் இந்த ஜனநாயக திருவிழாவைச் சுற்றியே இருந்தன.

 

தேர்தல் அறிவிக்கும் முன்னே கூட்டணி பேச்சுகள் துவங்கியிருந்தாலும், தேர்தல் அறிவிப்புக்குப் பின் கூட்டணி குறித்த பேச்சுகள் வேகமெடுக்கத் துவங்கியது. மக்களைச் சந்தித்து மக்கள் நாடியை நாடி அரசியலையும், பணியையும் செய்ய வேண்டிய கட்சிகள், தேர்தல் வியூகர்களை நியமித்தன. அவர்கள் கொடுத்த அசைன்மெண்டுகள் தேர்தல் மேடைகளில் பிரச்சாரமாக அரங்கேற்றப்பட்டன. 

 

விழா கமிட்டிகள்:


சிறு கட்சிகளை இழுக்கும் பணியில் மூழ்கின அதிமுகவும், திமுகவும். பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லையென சொன்ன ஜெ.வின் அதிமுக பாஜகவை தனது முதல் கூட்டணி கட்சியாய் அறிவித்தது. இனி ‘திராவிட கட்சி’களுடன் கூட்டணி கிடையாது என்று மிக கடுமையான சொற்களால் பேசிய பாமக இரண்டாவது கட்சியாக அண்ணா ‘திராவிட’ முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது. 

 

2021 Tamil Nadu Politics Path

 

காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம், விசிக, மதிமுக போன்ற காட்சிகளை திமுக தன்னுடன் வைத்துக்கொண்டு தொகுதி பங்கீட்டிலும், வேட்பாளர்களுக்கான சின்னம் குறித்தும் விவாதித்துக்கொண்டிருந்தது.

 

2016ல் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்தை முதலமைச்சர் என பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், 2021 தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் டி.டி.வி. தினகரனை முதலமைச்சர் என பிரச்சாரம் செய்தார்.

 

ஐ.ஜே.கே.வுக்கு 40, ச.ம.க.வுக்கு 37, தனக்கு 144, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஏனைய தொகுதிகள் என மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி ஒருபுறமும், 234 தொகுதிகளிலும் தனித்து நின்று 50% பெண்களுக்கு வாய்ப்பளித்து தனித்துவம் காட்டிய நாம் தமிழர் கட்சி ஒருபுறமும் என ஐந்து கமிட்டிகள் அமைந்து ஜனநாயக திருவிழா ஐந்து முனை போட்டியாக நடந்தது.

 

விழா கமிட்டி சார்பாக:


இந்தத் திருவிழாவில், விழா கமிட்டி சார்பாக பேசியவர்கள் சில இடங்களில் மைக் கிடைத்துவிட்டதே என வார்த்தைகளால் கோட்டை கட்ட, சில இடங்களில் சிலர் மினிமலாக மைக்கை பயன்படுத்தி பலரின் கவனத்தையும் ஈர்த்தனர்.


விழாவுக்குள் கூடி கலந்து களிப்பதற்கு முன் விழாவின் ஆரம்பமான ஊர்வலத்தில் இருந்தே துவங்குவோம்.

 

2021 Tamil Nadu Politics Path

 

தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்த எல்.முருகன், தேர்தலுக்கு முன் வேல் யாத்திரையை முன்னெடுத்தார். ஆட்சியிலிருந்த அதிமுக ஊர்வலத்திற்கு தடை விதித்தும், கட்டுப்பாடு விதித்தும்; தடைகளை கடந்து அந்த ஊர்வலம் நடந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு வடிவமாக திமுகவின் வியூக குழு வடிவமைத்த கிராம சபைக் கூட்டம் திருத்தணியில் நடக்க, அங்கு அன்பளிப்பாக வந்த வேலினை மு.க.ஸ்டாலின் கையில் எடுத்தார். பாஜகவை கண்டு திமுக அஞ்சுகிறது எனும் சொல்லாடல்களும் திமுகவைத் தைத்தன.

 

திருவிழாவின் ஊர்வலம் முடிந்து நாடகங்கள் துவங்க, 234 தொகுதிகளிலும் விழா கமிட்டியினர் தடாலடியாக மேடைகளையும், (பிரச்சார) ரதங்களிலும் மைக்கை தட்டி எதிர் அணியினரை வார்த்தை வானவேடிக்கைகளால் தாக்கினர். அப்படி திமுக எம்.பி. ஆ.ராசா, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி குறித்து பேசியது, திமுகவின் பிரச்சார வியூகத்திற்கும், மக்களை தன் பக்கம் இழுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும், அடியாய் விழுந்தது. ஆ.ராசாவின் இந்த பேச்சு தேர்தல் காலகட்டத்தில் பெரிய சர்ச்சையானது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்தனர்.

 

2021 Tamil Nadu Politics Path

 

அதேபோல, விராலிமலை தொகுதியில் குடும்பத்துடன் தேர்தல் பிரச்சாரம் நடத்திக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “எனக்கும் சுகர் இருக்கு, பி.பி. இருக்கு” என்று பேசியதும், தொகுதியில் ஒரு சிறுமி தங்கள் பகுதி குறித்து கேள்வி கேட்டதற்கு “பெண் பிள்ளையை அதுவும் சிறு பிள்ளையைத் தப்பாக வளர்த்துள்ளீர்கள்”  என்று பேசியதை எல்லாம் எதிர்க்கட்சிகள் வடம்பிடித்து இழுத்து சமூக வலைதளங்களில் ஓடவிட்டனர்.

 

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் அண்ணாமலை, ‘தூக்கிப்போட்டு மிதித்தால் பல் உடையும்’ என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பேசியது ஒருபுறம் சர்ச்சையாக, கோவையில் வானதி ஸ்ரீனிவாசன் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய உ.பி. முதலமைச்சர் யோகி வந்தபோது கைகலப்பு ஏற்பட்டு சிறுபான்மையினர் கடைகள்மீது தாக்குதல் நடந்தது. ஜனநாயக திருவிழாவில் சண்டைகள் சூழ்ந்தது.

 

புது அரசியல்வாதிகளான திமுகவின் உதயநிதி, ஒரு செங்கலை தூக்கி திமுகவின் வாக்கு எண்ணிக்கையை கட்டி எழுப்பினார். கோவை தெற்கில் ஆட்டோவில் சென்ற கமல்ஹாசன், எளிமையை எடுத்துக்கூறியும் வெற்றி வாய்ப்பை இழந்தார். 

 

ஒருவழியாக ஜனநாயக திருவிழாவின் ஊர்வலம், வானவேடிக்கை எல்லாம் முடிந்து விழாவின் கடைசி நாள் திமுக பவனி வந்து ஆட்சியில் அமர்ந்தது.

 

ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல்:



தமிழ்நாட்டின் முதல் முறையாக முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” எனக் கூறி பதவி ஏற்றபோது அவரது துணைவியார் உட்பட திமுகவின் உடன்பிறப்புகளின் கண்களும் கலங்கின.

 

2021 Tamil Nadu Politics Path

 

கரோனாவின் உச்சத்தில் அரியணை ஏறிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், சில மாத ஊரடங்கையும் அமல்படுத்தியது. பாஜகவை பொறுத்தவரை, தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தோல்வியடைந்தாலும், கட்சியின் அப்போதைய தலைவராக தமிழ்நாட்டில் நான்கு இடங்களை பாஜகவிற்கு வென்று கொடுத்த எல். முருகனை தேசிய அரசியலுக்கு இழுத்து மத்திய இணை அமைச்சர் பதவியையும், இளம் ரத்தமான அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு பாஜகவின் தலைவர் பதவியையும் கொடுத்து அவர்களின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் கொடுத்தது அக்கட்சி. அப்படி பதவி உயர்வு பெற்ற பாஜக தலைவர் அண்ணாமலை, எடுத்த எடுப்பிலேயே வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசுக்கு 10 நாட்கள் கெடு கொடுத்து தமிழ்நாட்டில் பாஜகவை சில நாட்களுக்கு பேசு பொருளாக்கினார்.

 

அரியணையில் அமர்ந்த திமுக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர், மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம், பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பு, கரோனா நிவாரணம் ரூ. 4,000 என தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, எதிர்க்கட்சியான அதிமுக, உரிமை தொகை ரூ. 1000, கேஸ் விலையை குறைப்போம் என ஐநூறு வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் ஏறிய திமுக எனக்கூறி வழக்கமான எதிர்க்கட்சி அரசியலை துவங்கியது. திமுகவின் வாக்குறுதிகள் குறித்து அதிமுக உட்பட எதிர்க் கட்சியின் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் ஒருசேர கேள்விகள் எழுப்ப, “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அதில் ஒன்றாக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததுபோல் கடந்த கால ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை திமுக அடையாளப்படுத்தியது. 

 

பொறுப்புக்கு வந்தவர்கள்:



தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை போலவே ஆளுநர் மாற்றமும் ஏற்பட, ஆர்.என்.ரவி தமிழகத்துக்கு ஆளுநராக வந்தார். அவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் அவரது நியமனத்துக்கு ஆளும் தரப்பு ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்பும், எதிர்க் கட்சியின் கூட்டணியில் இருக்கும் பாஜக தரப்பில் இருந்து ஆதரவும் கிளம்ப, அவரது நியமனம் குறித்து சில அரசியல் ஆரூடங்களும் கிளம்பாமல் இல்லை.

 

2021 Tamil Nadu Politics Path

 

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உயிரிழக்க, அக்கட்சியின் பொதுக்குழு கூடி தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்ததாக அதிமுக தலைமை பொறுப்பு தேர்ந்தெடுப்பதில் சில விதிகளை திருத்தி உள்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு போட்டியிட சென்ற ஓமபொடி பிரசாத் சிங் போன்ற எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக உறுப்பினர்கள் சிலர் விரட்டியடிக்கப்பட்ட பின், போட்டியின்றி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்தனர்.

 

2021 Tamil Nadu Politics Path

 

ஆளும் கட்சியின் ஊழலை கண்டறிந்தோ அல்லது யூகித்தோ எதிர்க்கட்சி புகையவிட்டு, புகாராக்கி ஆளும் தரப்பை பறக்கவிடும். இந்த ஆண்டு அரசியலில் எதிர்க் கட்சியின் கூட்டணியில் இருக்கும் பாஜகவின் மாநில தலைவர் அப்படியொரு புகாரை கிளப்ப, சில ட்விட்டர் பதிவுகளுக்கு பின் அது காணாமல் போனது.

 

“தி.மு.க அரசை எதிர்க்கவேண்டும் என்று எனக்கு எந்தக் கொள்கை, கோட்பாடும் கிடையாது. ஆனால், அண்ணன் பிரபாகரனை வீழ்த்திவிட்டீர்கள்... எனவே உங்களை வீழ்த்த வேண்டும் என்ற கடமை அவரின் பிள்ளைகளான எங்களுக்கு இருக்கிறது” என்று சமீபத்தில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து அந்த அரசியலை செய்துவருகிறார்.

 

“நான் பார்ட் டைம் அரசியல்வாதி”  என்று பேசிய மநீம தலைவர் கமல் தேர்தல்களின் போது அரசியல் ஓடத்தில் பயணித்து பிறகு ஓரங்கட்டிகொண்டு வருகிறார்.

 

2021ம் ஆண்டின் பெரும் காலம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நகர்ந்தது. அதேபோல், வரும் 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுடன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை பெற்று கோட்டையைப் பிடித்தாலும், உள்ளாட்சிகளில் ஆளும் கட்சி கோட்டைவிட்ட வரலாறும் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால், 2022ம் ஆண்டு அரசியல் ஆர்வலர்களுக்கும், அரசியலால் ஆளப்பட்டு வரும் பொதுமக்களுக்கும் பெரும் திருப்பங்களும், திகைப்புகளும் காத்திருக்கலாம். அவை அனைத்தையும் 2022ன் இறுதி நாட்களில் ஒன்று சேர்த்து புரட்டிபார்ப்போம். 

 

படங்கள்: ஸ்டாலின், அசோக்குமார், குமரேஷ்

 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.