Skip to main content

புதிய ஜானர் கை கொடுத்ததா? - ‘சொப்பன சுந்தரி’ விமர்சனம்!

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

soppana sundari movie review

 

ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் கதையின் நாயகியாக களம் இறங்கி இருக்கும் படம். இந்த தடவை முதல் முறையாக டார்க் காமெடி படம் மூலம் களத்தில் குதித்துள்ளார். இந்த புதிய ஜானர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கை கொடுத்ததா?

 

ஸ்லம்மில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு நகை கடையில் வேலை செய்கிறார். அந்த நகை கடைக்கு நகை வாங்க வரும் தன் அண்ணன் கருணாகரன் அங்கு கொடுக்கும் ஒரு கூப்பனை தன் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். அந்த கூப்பனை தன் பெயர் போட்டு குலுக்களில் சேர்த்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் அந்த குலுக்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு கார் பரிசாக விழுகிறது. அந்தக் காரை வரதட்சணையாக கொடுத்து தன் ஊமை அக்கா லட்சுமி பிரியா சந்திர மௌலியின் திருமணத்தை நடத்த ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டமிடுகிறார். அந்த நேரம் பார்த்து அந்த கார் தனக்கு தான் சொந்தம் என அண்ணன் கருணாகரன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை அடுத்து போலீஸ் அந்த காரை ஜப்தி செய்து விடுகிறது. இப்போது அந்த கார் யாருக்கு சொந்தம்? போலீஸில் இருந்து அந்த கார் மீட்கப்பட்டதா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

ஒரு காம்பாக்ட்டான பட்ஜெட்டில் சில பல சுவாரஸ்ய எலிமெண்ட்களோடு சேர்ந்து டார்க் காமெடி படமாக கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் எஸ் ஜி சார்லஸ். இந்த படம் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் சாயலில் எடுக்கப்பட்டிருப்பது படத்திற்கு சற்று பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் அதுவே படத்திற்கு பல இடங்களில் பாதகமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக முதல் பாதி ஆங்காங்கே தொய்வாக இருந்தாலும் இரண்டாம் பாதி பல்வேறு திருப்பங்களுக்கிடையே பயணித்து சுவாரசியத்தை கூட்டி ரசிக்க வைத்து கரை சேர முயற்சி செய்திருக்கிறது. இரண்டாம் பாதியில் இருந்த வேகமும் டிவிஸ்டுகளும் முதல் பாதியில் இருந்திருந்தால் இன்னும் கூட கவனிக்கத்தக்க படமாக இது மாறி இருக்கும்.

 

வழக்கம்போல் லோக்கல் பெண்ணாக வரும் கேரக்டரை சிறப்பாக செய்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தெந்த இடங்களில் எவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ் வேணுமோ, எந்த அளவு நடிப்பு வேண்டுமோ அதை சரியான அளவில் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்திருக்கிறார்கள்

 

அவருடைய அம்மா விஜய் டிவி தீபா மற்றும் அக்கா லட்சுமி பிரியா சந்திரமௌலி. இதில் தீபா வழக்கமான கலகலப்பு நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருந்தாலும் இவரைக் காட்டிலும் வாய் பேச முடியாத கேரக்டரை மிகச் சிறப்பாக செய்து மீண்டும் ஒருமுறை கவனிக்க வைத்துள்ளார் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. இவரின் சின்ன சின்ன முக அசைவுகளும் ஏக்கமான பார்வையும் கேரக்டரை அப்படியே உள்வாங்கி என்ன வேண்டுமோ அதை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளது. அண்ணனாக நடித்திருக்கும் கருணாகரன் தனக்கு என்ன வருமோ அதை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் மைம் கோபி, டான்ஸ் மாஸ்டர் சதிஷ், போலீஸ் அதிகாரி சுனில் மற்றும் சிறிது நேரமே வரும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு ஜீவனாக அமைந்திருக்கின்றனர். 

 

ஸ்லம் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலமுருகன். அதேபோல் இரவு நேர காட்சிகளும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை கதையோடு ஒன்றி அமைந்துள்ளது. பல இடங்களில் அதுவே நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறது. ஒரு சிம்பிளான கதையை எடுத்துக் கொண்ட இயக்குநர் அதில் மெனக்கெட்டு டார்க் காமெடிகளை சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல் இரண்டாம் பாதியில் அவர் கதைக்கு கொடுத்த கவனத்தை முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இந்த படம் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

 

சொப்பன சுந்தரி - கலகலப்பான சுந்தரி!

 

 

சார்ந்த செய்திகள்