Skip to main content

வருட இறுதியில் ஓர் அருமையான படம் - ‘செம்பி’ விமர்சனம்

Published on 30/12/2022 | Edited on 31/12/2022

 

Sembi Movie Review

 

நகைச்சுவை நடிகையாக முனி படம் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை சிறப்பாகத் தொடங்கி நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கோவை சரளா தற்பொழுது குணச்சித்திர நடிகையாக செம்பி படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இவரின் இந்தப் புதுமையான முயற்சிக்குப் பலன் கிடைத்ததா? இல்லையா?

 

கொடைக்கானலில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்களில் ஒருவராக இருக்கும் வயதான பாட்டி கோவை சரளா, பேத்தி செம்பியுடன் வாழ்ந்து வருகிறார். பேத்தியை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சின்ன சின்ன தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஒரு நாள் மலைக்கு தேன் எடுக்க சென்ற இடத்தில் சிறுமி செம்பியை பெரிய அரசியல்வாதியின் மகனும், அவனுடைய நண்பர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடுகின்றனர்.

 

இந்த விஷயம் அறிந்த ஒரு போலீஸ் அதிகாரி கோவை சரளா கொடுத்த கேசை வாபஸ் வாங்கச் சொல்லி அவருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்கிறார். அதற்கு மறுக்கும் கோவை சரளா அந்த இடத்திலேயே அந்த போலீஸ் ஆபீசரை உயிர் ஊசலாடும் வரை அடித்துவிட்டு அப்படியே ஊரைவிட்டு தப்பித்து ஓடுகிறார். போகும் வழியில் தம்பி ராமையாவின் பேருந்தில் ஏறிச் செல்கிறார். அந்தப் பேருந்தில் இவருடன் 27 பயணிகள் பயணிக்கின்றனர். அவர்களிடம் கோவை சரளா நடந்தவற்றைக் கூறுகிறார். இதையடுத்து அந்தப் பேருந்தில் இருக்கும் அஷ்வின் உள்ளிட்ட சிலர் உதவியோடு செம்பியின் வழக்கு போக்சோ நீதிமன்றத்திற்கு வருகிறது. அங்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, இல்லையா? என்பதே செம்பி படத்தின் மீதி கதை.

 

கும்கி படத்திற்கு பிறகு தோல்வி படங்களாகவே கொடுத்து துவண்டு போயிருந்த இயக்குநர் பிரபு சாலமன் தற்பொழுது செம்பி படத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு எளிமையான கதையை வைத்துக்கொண்டு சிறப்பான திரைக்கதை மூலம் அழுத்தமான காட்சிகளோடு பார்ப்பவர் மனதை கலங்கச் செய்து ஒரு ஃபீல் குட் படத்தை பார்த்த உணர்வைக் கொடுத்து கம்பேக் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

 

இவரின் மைனா, தொடரி படங்கள் போல் படம் ஒரு மலைக்கிராமத்தில் ஆரம்பித்து, பிறகு ஒரு பேருந்தில் படம் பயணித்து எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு காட்சிகளைத் தொகுத்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். அழுத்தமான காட்சிகளும் சிறப்பான திரைக்கதையும் அதில் நடித்த நடிகர்களின் சிறப்பான பங்களிப்பும் இருந்தால் எந்த ஒரு படமும் வெற்றி பெறும் என்பதை இந்தப் படம் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

 

இந்த வயதிலும் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து உலகத்தரம் வாய்ந்த ஒரு நடிப்பைக் கொடுத்து படத்திற்கு உயிரூட்டி உள்ளார்  கோவை சரளா. இதுவரை நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்ற கோவை சரளா இப்படம் மூலம் குணச்சித்திர நடிப்பிலும் கைத்தட்டல் பெற்று தியேட்டரை அதிரச் செய்திருக்கிறார். பேத்தியுடன் பாசமாகப் பழகும் காட்சிகளிலும் சரி; அவருக்காக உருகும் காட்சிகளிலும் சரி; அவரை காப்பாற்றப் போராடும் காட்சிகளிலும் சரி; நம் வீட்டில் இருக்கும் கிராமத்துப் பாட்டிகளை அப்படியே கண் முன் பிரதிபலித்துக் காட்டி, பல இடங்களில் கண்கலங்க வைத்தும், சில இடங்களில் சிலிர்க்கவும் வைத்துப் பரவசப்படுத்தி இருக்கிறார்.

 

இவருக்கு விருதுகள் நிச்சயம். சின்ன வேடமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறார் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின். இதற்கு முன் இவர் பெற்ற கலவையான விமர்சனங்களுக்கு இந்தப் படம் மூலம் ஓரளவு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் போல் தனது இன்னசென்டான நடிப்பின் மூலம் காட்சிகளை என்ஹான்ஸ் செய்திருக்கிறார்  தம்பி ராமையா.

 

அதேபோல் செம்பியாக நடித்திருக்கும் அந்த சிறுமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடித்த முகம் தெரியாத நடிகர்கள் பலர், இதுதான் தனக்கு முதல் படம் என்பது போல் இல்லாமல் தேர்ந்த நடிகர் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வேகத்தையும், கதைக்கு பக்கபலமாகவும் இருந்து, படத்தை கரைசேர்க்க உதவியிருக்கின்றனர். அவர்களுடைய பங்களிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.

 

மலைக்கிராமம், புல்வெளி, அருவி, பனிமூட்டம், அதற்கு நடுவே இருக்கும் பனித்துளிகள் என ஒரு விஷுவல் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன். பொதுவாக பிரபு சாலமன் படங்கள் என்றாலே மலையும், அது சார்ந்த பகுதிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்படும். இந்தப் படத்திலும் அவை சிறப்பாக வெளிப்பட்டு பார்ப்பவர்களுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அது கதைக்கும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை கரைசேர்க்க உதவியிருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் இனிமையாகவும் பின்னணி இசை பல இடங்களில் நம்மை உருகவும் வைத்திருக்கின்றன. ஒரு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரபு சாலமன் படங்களில் இசை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

 

கும்கி படத்திற்குப் பிறகு ஓரளவு வெற்றியோ வரவேற்போ இல்லாத படமாக கொடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் செம்பி படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல தரமான படத்தைப் பார்த்த உணர்வைக் கொடுத்து மீண்டும் கைதட்டல் பெற்று இருக்கிறார்.

 

செம்பி - சிறப்பு!


 

சார்ந்த செய்திகள்

Next Story

மதம் சார்ந்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட பிரபு சாலமன்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

prabu solomon sembi movie press show issue

 

தமிழ் சினிமாவில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'செம்பி'. இதில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாளை (30.12.2022) வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரபு சாலமன். 

 

அப்போது படத்தின் இறுதிக் காட்சியில், “உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிரானிடத்திலும் அன்பு கூறுவாயாக இயேசு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்தவ மதத்தைத் திணிப்பதுபோல உள்ளது எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "அப்படி எந்த நோக்கத்திலும் நான் சொல்லவில்லை. சிறு வயதிலிருந்தே நான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். அதில் பழக்கப்பட்டவன்." என்றார். குறுக்கிட்ட செய்தியாளர்கள், “படம் எடுத்தது நீங்கள். இயக்கம் பிரபு சாலமன் என்று குறிப்பிட்டிருக்கலாமே” என்றனர்.

 

இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "கிறிஸ்தவம் என்பது ஒரு மதமும் கிடையாது. மதத்தைப் பரப்ப இயேசுவும் வரக் கிடையாது. அன்பு மட்டும்தான் எங்களுடைய நோக்கம். அதைத்தான் சொல்லியிருக்கோம்" என்றார். பின்பு செய்தியாளர்களுக்கும் பிரபுசாலமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு பிரபு சாலமன், "உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. 

 

 

Next Story

"நீங்கள் ஒரு நடிப்பு ராட்சசி" - கோவை சரளாவை புகழ்ந்த கமல்

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

kamalhaasan praises kovai sarala

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.  மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. 

 

இதனிடையே விக்ரம் படத்தின் வெற்றி பெற்றதற்காக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா, அஸ்வின் குமார் உள்ளிட்ட செம்பு படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது செம்பு படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டு படக்குழுவினரை வெகுவாக கமல் பாராட்டியுள்ளார். அத்துடன் செம்பி படத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நீங்கள் ஒரு நடிப்பு ராட்சசி  என்று கமல் புகழ்ந்துள்ளார்.