
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படம் மூலம் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தை பாரதிராஜாவே இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதனிடைய சமுத்திரம், கடல் பூக்கள், மகா நடிகன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடைசியாக கார்த்தியின் 'விருமன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மனோஜ் பாரதிராஜா கடந்த ஆண்டு வெளியான மார்கழித் திங்கள் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா (வயது 48) மாரடைப்பால் இன்று (25.03.2025) காலமானர். இவரது தமிழ்த்திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய நண்பன் பாரதியின் (பாரதிராஜா) மகனான மனோஜ் குமார் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்வதென்றே எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படியொரு சோகம், பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும், நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது, ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று காலம் விதித்திருக்கின்ற காரணத்தினால், மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என உருக்கமாக வீடியோவில் பேசியிருக்கிறார்.