
சென்னையில் நேற்று (25-03-25) சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி உள்ளிட்ட 6 பகுதிகளில் பத்து சவரனுக்கு மேற்பட்ட நகைகள் ஒரே மணி நேரத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. து. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு இருவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறி தப்பிக்க முயன்றதும் தெரிந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் ஹைதராபாத் செல்லும் விமானத்திலேயே வைத்து கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் ஜாபர் குலாம் ஹுசைன் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த பொங்கலன்று தாம்பரம் பகுதியில் இதேபோல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு பின்னர் விமானத்தில் தப்பிச் சென்றனர் என்பதும், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இந்த சூழ்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட ஜாபர் குலாம் ஹுசைனை நேற்று நள்ளிரவு தரமணி பகுதியில் வைத்து திருவான்மியூர் போலீசார் என்கவுண்டர் செய்தனர். நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் ஜாபரை என்கவுண்டர் செய்தது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (26-03-25) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அதில் அவர், “சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் இரண்டு பேரை பிடித்தோம். அவர்கள் கொடுத்த தகவலின்படி, ரயிலில் தப்பிச் சென்ற மற்ற குற்றவாளியை ரயில்வே துறை உதவியோடு பிடித்தோம். மொத்தம், 3 பேரை கைது செய்து அவர்கள் பறித்த அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த 3 பேருமே, மும்பை பகுதியைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஆவர். குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பைக்கை பிடிப்பதற்காக போலீசார் அவரை அழைத்துச் சென்ற போது, போலீசை தாக்கி தப்பிச் செல்ல முயற்சித்தார். அதனால், தற்காப்புக்காக போலீசார் அவரை என்கவுண்டர் செய்துள்ளனர். பிடிப்பட்ட மூன்று பேரும் இரானி கொள்ளையர்கள். மும்பை போலீஸ் சொன்ன தகவல்படி, இந்த கும்பல் மிகப்பெரிய கும்பல். குற்றவாளி ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருந்ததாக அங்கிருக்கும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரில், ஒருவர் மட்டும் இங்கிருக்கும் லோக்கல் சப்போர்ட்டில் சில ஏற்பாடுகளை இங்கு செய்துள்ளார். இரண்டு குற்றவாளியுமே, அதிகாலை 2 மற்றும் 4 மணியளவில் விமானத்தில் இருந்து வந்து, மூன்றாவது குற்றவாளி வைத்திருந்த பைக்கை எடுத்து கொள்ளையடித்திருக்கிறார்கள். மூன்றாவது நபர் மட்டும், இங்கு ஏற்கெனவே வந்து நோட்டமிட்டிருக்கிறார். இன்னும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.