
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (25-03-25) டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி, கே.பி முனுசாமி, தம்பிதுரை, சி.வி.சண்முக உள்ளிட்டோர் உடல் இருந்தனர். கடந்த 2023இல் அதிமுக - பா.ஜ.க கூட்டணி முறிவு ஏற்பட்ட போது, இனி எப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இருந்த போதிலும், பா.ஜ.கவோடு அதிமுக கூட்டணி சேரும் என்று தகவல் பரவி வந்த வண்ணம் இருந்தது.
2026 சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனால், மீண்டும் அதிமுக - பா.ஜ.க கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று (26-03-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்தோம். மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். குறிப்பாக, மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் வர வேண்டிய நிதி, கல்வி நிதி உள்ளிட்டவைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரினோம். அதேபோல், தமிழகத்தில் தொடர்ந்து கடைபிடித்து வரும் இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து வேண்டுகோள் விடுத்தோம்.

டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதை முழுமையாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். சட்ட ஒழுங்கு சீர்கேடு, சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை சம்பவம், போதைப் பொருள் நடமாட்டம் என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். பா.ஜ.க - அதிமுக கூட்டணி குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக ஊடகங்களில் மட்டுமே செய்தி வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்காகவே அமித்ஷாவை சந்தித்துப் பேசினோம்.
தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஏற்கெனவே, நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தை காணொளி மூலம் தொடங்கி வைத்தோம். அதை நேரடியாக பார்வையிட்ட பிறகு, அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டோம். வாய்ப்பு கொடுத்ததால், மக்கள் பிரச்சனைகளை விளக்கமாக எடுத்துக் கூறினோம். தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களுடைய கொள்கை என்பது எப்போதும் நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாரும். திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணிகள் எல்லாம் அங்கேயே இருக்கப் போகிறதா?. அந்த நேரத்தில் எப்படி சூழ்நிலை ஏற்படுகிறதோ அதற்கு தகுந்த மாதிரி தான் கூட்டணி மாறும்” எனத் தெரிவித்தார்.