
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது உதவியாளர் தேவ் ஆனந்த் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக செய்து பதிவிட்டதாக திமுக நிர்வாகிகள் மீதே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்ற 4 ஆண்டுக் காலத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்டப் பணிகளும் செய்யவில்லை, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கவில்லை என்று கூறி சொந்த கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமைச்சர் மீது அதிருப்தியில் இருக்கும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, ‘ஊழலுக்குக் கடலூர் பன்னீர், கமிஷனுக்கு அமைச்சரின் உதவியாளர் தேவ் ஆனந்த், வசூல் செய்வதற்கு கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் கௌதம்’ என்று திமுக நிர்வாகிகள் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கிழக்கு மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர் துரைராஜ், கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் எவரெஸ்ட் மாதையன் மற்றும் சில கட்சி நிர்வாகிகளை விசாரணைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைத்திருந்தார். இந்து தர்மபுரி மாவட்ட திமுகவினரை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான திமுக நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மாவட்ட வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இவர் வந்த பிறகு மாவட்டத்தில் திமுகவினரிடையே கருத்து வேறுபாடு உருவாகி உட்கட்சி பூசலாக மாறி உள்ளது. மேலும் அமைச்சரின் உதவியாளர் தேவ் ஆனந்த் கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை. இவர்களை மாவட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.