
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க அனிருத்தே இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் கேரளா படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு முதல் நாள் படப்பிடிப்பு என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் ரஜினியுடன் நடித்த படையப்பா படம் வெளியாகி 26ஆண்டுகள் கடந்த நிலையில் அதையும் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “படையப்பா படம் வெளியாகி 26 வருட நிறைவு மற்றும் ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் ஷூட்டிங்” எனப் பதிவிட்டிருந்தார்.
படையப்பா படம் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. இதில் ரஜினிக்கு வில்லனாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் ரஜினிக்கு இணையான பாராட்டை அவரும் பெற்றார். பின்பு ரஜினியின் பாபா படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு முன்னதாக படிக்காதவன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படங்களை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.