Skip to main content

டி.டி.வி. தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்ற இ.பி.எஸ்.!

Published on 16/04/2025 | Edited on 16/04/2025

 

EPS withdraws case against TTV Dhinakaran

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “அதிமுகவின் கொடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் இந்த வழக்கை தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டி.டி.வி.தினகரன் கடந்த 12ஆம் தேதி (12.04.2025) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்திருக்கிறார். நாங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தீய சக்தி திமுகவை வீழ்த்துவதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள். அவர்களின் கொள்கைகளை தங்கி செல்பவர்கள். தீயசக்தி திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும் இந்தியாவின் பிரதமர் மோடியின் கரத்தை வலுபடுத்துவதற்காகவும் அவருடைய அணியில் இருக்கிறோம்.

மோடி அணியில் நாங்கள் இருக்கிறோம். அதனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரு குறிக்கோளோடு செயல்படுகிறோம். உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் இப்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சராக இருந்த பழனிசாமியிடம் என்ன பேசினார் என்பதை நண்பர் ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் வெளிப்படையாகச் சொன்னார்கள். அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 2026இல் திமுகவை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்” என்றார். 

சார்ந்த செய்திகள்